2 Mar 2016

இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு- 111 இற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பத் திகதி மார்ச் 28 வரை நீடிப்பு-இலங்கை ஆசிரியர் சங்கம்

SHARE
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைவதாக இருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு- 111  இற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதியை கல்வி அமைச்சு இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபன் செவ்வாய்க்கிழமை 01.03.2016 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  இலங்கை கல்வி நிருவாக சேவையிலுள்ள குறைபாடுகளை நீக்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தொடராக மேற்கொண்ட கவன ஈர்ப்பு, வேண்டுகோள் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஜனவரி மாதம் 27ம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்பாக நடைபெற்ற அதிபர்களின் நடைப்பயணம் ஆர்ப்பாட்டம் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலின் பயனாக இது சாத்தியமாகியுள்ளது.
இலங்கை கல்வி நிருவாக சேவைப் பிரமாணக் குறிப்பினை திருத்துதல் தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி எதிர்வரும் மார்ச் 28ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

1828ஃ28 இலக்கமிடப்பட்ட இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் வர்த்தமானி பத்திரிகையின் புதிய இலங்கை கல்வி நிருவாக சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக 3 தடவைகள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதோடு திறந்த போட்டிப் பரீட்சைக்கான வயதெல்லை 30 இலிருந்து 32 வரையும், மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கான வயதெல்லை 50 இலிருந்து 52 வரையும் திறமையும் சேவை மூப்பும் அடிப்டையில் வயதெல்லை 55 இலிருந்து 58 வரையும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் காலவரையறை 30 வயதிற்கு மேல் காணப்படுவதாலும் தரம் 1 அதிபர்களின் சிரேஷ்ட தரம் 55 வயதிற்கு மேல் காணப்படுவதனையும் கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் உதயரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை பெறப்பட்டதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி. உதயரூபன் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: