சிக்கலான குற்றங்களை விசாரணை செய்வதற்கும், வழக்கு தொடுப்பதற்கும், அனைத்துப் பிரஜைகளுக்கும் நீதி வழங்குதலை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் குற்றவியல் சட்ட அதிகாரிகளின் இயலுமையை மேம்படுத்தும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிகழ்ச்சியை நடைமுறைப் படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில்
அமெரிக்காவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளதாக கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதுவராலயம் செவ்வாய் கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
எந்தவொரு ஜனநாயகத்தினதும் இதயமாக நீதியான மற்றும் சமத்துவமான நீதி முறைமை காணப்படுகின்றது என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் இதன்போது குறிப்பிட்டார். சர்வதேச தரங்களுடன் இயைந்ததாக இலங்கையின் நிபுணத்துவம் மற்றும் வெளிப்படைத் தன்மையை வளர்ப்பதற்கு தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வேளையில் செயலாளர் கெறி கூறியதைப் போன்று, இந்த புதிய நிகழ்ச்சிகள் சட்ட முறைமையில் மறுசீரமைப்பிற்கு உதவுவதுடன், தனிநபர் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், குற்றவியல் சட்ட நிறுவனங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை தொழில்சார் நிபுணர்களாக்கும் கொள்கைகளை முன்னிறுத்தல், மற்றும் பொலிஸ் மற்றும் குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை உறுதி செய்தல் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். மேலதிகமாக, ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி, திட்டமிடப்பட்ட குற்றங்கள் போன்ற சிக்கலான குற்றச்செயல்களை கையாள்வதற்கான இலங்கையின் இயலுமையை கட்டியெழுப்புவதற்கான தனியான நிகழ்ச்சிகளும் இதில் உள்ளடங்கியிருக்கும்.
பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா, அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment