16 Jun 2015

மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைப்பதற்கான உபகரணங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா கிராம சேவகர் பிரிவில் வலைவாடி கிராமத்தில் வசித்து வந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து தற்போது மீள்குடியேறி வரும் சிங்கள குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புக்களை அமைப்பதற்கான பொருட்களை கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களை மக்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அரச அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு இழந்தவற்றை முழுமையாக வழங்கமுடியாவிட்டாலும் அவர்களது உட்கட்டமைப்பு வசதிகள் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இங்கு மேலும் தொடர்ந்து உரையாற்றிய இவர் - கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளின் போது தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு சென்று தற்போது தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறியோருக்கு தாங்கள் இடம் பெயர்ந்த போது இழந்தவற்றை முழுமையாக வழங்க முடியாவிட்டாலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

கல்குடா கிராம சேவகர் பிரிவில் வலைவாடி கிராமத்தில் வசித்து வந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து மீள் குடியேறிய குடும்பங்களில் முதற்கட்டமாக இருபத்தைந்து குடும்பங்களுக்கு மீள் குடியேற்ற அமைச்சினால் 25,000 ரூபா பெறுமதியான சீமெந்து பக்கெட்டுக்கள் 8ம், கூரைத்தகடுகள் 12ம், மாவட்ட செயலகத்தினால் தற்காலிக கொட்டில்கள் அமைப்பதற்கான மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வலைவாடி கிராமத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மீள் குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுதீன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: