3 Jan 2015

மாகாண சபை உறுப்பினர் சிப்லி உட்பட மூவரின் வீட்டில் கைக்குண்டு தாக்குதல்

SHARE
காத்தான்குடியிலுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் சிப்லி பாறூக் உள்ளிட்ட மூவரின் வீடுகள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (03.1.2015) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டு முன் பகுதியில் இருந்த கதிரைகள் உட்பட சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

இவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு கட்சி அலுவலகங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (02.1.2015) நள்ளிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த கதிரைகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகமொன்று தாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. பாலமுனை வீதியிலுள்ள இவ்வலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களும், ஜனாதிபதியின் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 
SHARE

Author: verified_user

0 Comments: