1 Dec 2014

ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப்போவதில்லை

SHARE
மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப்போவதில்லை என்று  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்  எம்.அப்துர் ரஹ்மான்  திங்கட்கிழமை (01)  வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இக்கட்டான தருணங்களில் கூட எமது மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப்போவதில்லை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உண்மைக்கு  புறம்பான பல்வேறுபட்ட கருத்துக்களை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறி, தனது வழமையான பாணியில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார்.

முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துவரும் பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டுமெனில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே முஸ்லிம்கள் வாக்களிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளமை  மாத்திரமின்றி, பொது வேட்டபாளரான மைத்திரிபால சிறிசேன படுதோல்வி அடையவுள்ளதாகவும் கூறி வருகிறார்.

இப்போது தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலை மாற்றம், எதை நோக்கியிருக்கிறது என்பது எமக்குத் தெரியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இன வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பால், நாட்டு மக்கள் எல்லோருமே எப்படியான மாற்றத்துக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

யுத்தத்தின் பின்னரான இலங்கை, சகல இன மக்களுக்குமான விடிவையும் சுபீட்சத்தையும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வையும் கொண்டதாக அமையும் என்று எதிர்பார்த்த மக்கள் பாரிய ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்துக்கும்  மற்றும் அவரது நெருங்கிய சகாக்களுக்கும் மாத்திரமே சுபீட்சமும் ஆடம்பர வாழ்வும் கிடைத்திருக்கிறது.

சாதாரணமாக வாழ்ந்த மக்கள் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். ஏழைகள் பரம ஏழைகளாக மாறிவருகிறார்கள். சட்டமும் ஒழுங்கும் சிதைக்கப்பட்டிருக்கிறது. சமாதான சக வாழ்வுக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையின் சுதந்திரமும் ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகின்றன. மீளமுடியாத கடன் சுமைக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தின் தவறான வெளிநாட்டுக்கொள்கை சர்வதேச அரங்கில் எம் நாட்டை படுமோசமாக தனிமைப்படுத்திவருகிறது.

ஜனநாயக விழுமியங்களுக்கும் மக்களின் விருப்புக்களுக்கும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு தனி நபர் சர்வதிகார ஆட்சி பலப்பட்டுவருகிறது.

இதனை ஒரு முடிவுக்கு கொண்டுவராவிட்டால், இந்நாட்டின் எதிர்காலம் இருண்டதாகிவிடும் என்ற கவலையும் அக்கறையுமே இன்று ஒரு ஆட்சிமுறை மாற்றத்தை நோக்கி அத்தனை பேரையும் அணி திரளச் செய்திருக்கின்றது.

அந்த வகையில்,  சிங்கள தமிழ் மக்களோடு இணைந்து, இந்த தேசப்பற்றுமிக்க பங்களிப்பை வழங்குவதற்கு முஸ்லிம்களும் அணிதிரளத் தொடங்கியிருக்கிறார்கள். எப்போதுமே அரசாங்கத்தின் முகவர்களாகத் தொழிற்படும் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை இந்த நிலைமை கவலைகொள்ளச் செய்திருக்கின்றது. எனவே இவர் மக்களை ஏமாற்றும் இவ்வாறான கதைகளை சொல்லத் தொடங்கியிருக்கின்றார். இவர்களின் பொறுப்பற்ற, சுயநலமிக்க கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப்போவதில்லை. ஏனெனில் இவர்களின் கடந்த கால வரலாறு மக்களுக்கு நன்கு தெரியும்.

பொது பல சேனாவுக்கு பாடம் புகட்ட வேண்டுமெனில், ஜனாதிபதிக்கு வாக்களிக்கவேண்டும் என்ற கருத்துக் கூறும் ஹிஸ்புல்லாஹ் யார் என்பதும் எமக்குத் தெரியும்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: