4 Feb 2024

2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

SHARE

2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

2023 ஆம் ஆண்டுகளில் நாட்டில் எதிர்க்கட்சி அல்ல ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்றில்லாமல் மாவட்ட அபிவிருத்திக்கு என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை(02.02.2024) மாலை நடைபெற்ற போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

 போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவு சுமார் 169 சதுரக் கிலோமீற்றரைக் கொண்ட மிகப் பெரிய சதுரக் கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரதேசமாகும். அங்கு பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களாகவுள்ளனர். எனவே அப்பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்தி செய்வது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம். மக்களின் பிரச்சனைகளை நிறைவேற்றுவதில் ஏதாவது பிரச்சனைகள் வருமாயின் அதனை எமக்கு அறிவிக்குமாறும் அதனை நாம் உரிய அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் எனடிதிணைக்களத் தலைவர்களிடத்தில் தெரிவித்துள்ளோம்.

2023 ஆம் ஆண்டிலும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு நான் அபிவிருத்திக் குழுத்தலைவராக இருந்து அப்பகுதி மக்களுக்கு முடிந்தளவு சேவைகளைச் செய்துள்ளேன். அதுபோல் இவ்வருடமும் நாம் எம்மால் இயன்ற சேவைகளை இப்பகுதி மக்களுக்கு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

சஜித் பிரேமதாச அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் இன்னும் முழுமைபெறாமலுள்ளனஇந்நிலையில் இவ்வாறான வீட்டுத்திட்டங்களை முழுமைபெற வைப்பதற்குரிய தகவல்களை தற்போதைய வீடமைப்பு அமைச்சர் திரட்டிக்கொண்டு வருகின்றார். ஆனாலும் சஜித் பிரேமதாஸ அவர்கள் கொண்டு வந்த அந்த வீட்டுத்திட்டத்திலே சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளும் தற்போது எழுந்துள்ளன. அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

அந்த வீடுகளை அமைப்பதற்கு முழுமையாக அரசாங்கம் செலவிடவில்லை, அதற்கு மக்களும் அவர்களது சொந்த நிதியையும் செலவு செய்துள்ளார்கள். அதனை தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக அவற்றை முடித்துக் கொடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களை நாங்கள் முன்நெடுத்துள்ளோம்.

எனவே  2023 ஆம் ஆண்டு நாட்டில் எதிர்க்கட்சி அல்ல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்றில்லாமல் மாட்டதின் அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

எது எவ்வாறு அமைந்தாலும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த நிதி மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும். என அவர் இதன்போது தெரிவித்தார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: