9 Jan 2024

பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான தவராசா காலமானார்.

SHARE

பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான தவராசா காலமானார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பல்துறைக் கலைஞரும் எழுத்தாளரும் பிரதேச செயலாளருமான வெள்ளத்தம்பி தவராசா (வயது 59) திங்களன்று 08.01.2024 காலமானார்.

இவர் கடந்த பல வருடங்களாக கோறளைப்பற்று மேற்கு எனும் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள நிதியமைச்சுக்கு இடமாற்றம் பெற்று அங்கு கடமையாற்றி வந்தபோது சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவர் நடிகர், கூத்துக் கலைஞர், கவிஞர், இலக்கியவாதி, ஆய்வாளர், எழுத்தாளர் என பல்துறைக் கலைஞராக விளங்கியவர்.

நாடக இயக்குனராய், கலை இலக்கிய விமர்சகனாய், குறும்பட தயாரிப்பாளனாய்த்  திகழ்ந்தவர் என்று இலக்கியவாதிகள் தெரிவிக்கின்றனர்.

படி' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இவர் தனது இலக்கியத் துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

ஆசிரியராக தனது சேவையை ஆரம்பித்த தவராசா   திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மாநகர ஆணையாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் என அரச நிர்வாக சேவையின் பல உயர் பதவிகளை வகித்தவர்.

இதுவரை தனித்திருத்தல் (கவிதைத் தொகுப்பு) என் கொலை காரர்கள் (சிறுகதைத் தொகுப்பு) மங்கையராய் பிறப்பதற்கே (நாடக நூல்) அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை என இவரது நான்கு நூல்கள்  வெளிவந்துள்ளன.

தவராசா  பிரதேச செயலாளராக கடமையாற்றிய இடங்களில் பிரதேச கலாசார பேரவை மூலமாக பல மலர்களை  வெளியிட்டு கலை இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியதோட சிறுகதை, கவிதை என பல பயிற்சிப் பட்டறைகளையும்  நடத்தி வந்தவர்.

அமரரான தவராசா தனது இளமைப் பருவத்திலிருந்தே பாடசாலை மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பொது மக்களுக்கும் நாடகங்கள் கூத்துக்கள் மூலமாக மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் அரங்குகளை நடத்தி வந்ததோடு அதற்கான பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: