12 Apr 2023

அருவி பெண்கள் வலையமைப்பினால் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை முகாம்!!

SHARE


மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான திருமதி. மயூரி ஜனன் தலைமையில்  மட்டக்களப்பு தன்னாமுனை மியாணி மண்டபத்தில் குறித்த இலவச சட்ட ஆலோசனை முகாம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இலவச சட்ட ஆலோசனை முகாமில் சட்டத்தரணிகளான சின்னத்துரை ஜெகன், பேரின்பராஜா துஸ்யந்தி, மயூரி ஜனன், ரவிராஜ் ரமனா, நயுமுடீன் சித்தி நஜீபா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சட்ட ஆலோசனை வழங்கியிருந்தனர்.

பிரபல்யம் மிக்க சட்டத்தரணிகளை கொண்டு நடாத்தப்பட்ட இச் சட்ட ஆலோசனை முகாமில் 400 இற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதுடன், அதில் 150 இற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச வழக்குத்தாக்கல் மேற்கொள்வதற்கான பதிவுகளையும் மேற்கொண்டுள்ளனர்.விளையாட்டு

குறித்த முகாமில் முஸ்லிம் பெண்களின் விவகாரங்கள் (திருமணம், விவாகரத்து, பராமரிப்பு), இணையவழி குற்றங்கள், பிறப்பு, இறப்பு பதிவுகள் தொடர்பாகவும், விவாகம் மற்றும் விவாகரத்து, இல்லத்து வன்முறை, காணிப் பிணக்குகள், சிறுவர் பிரச்சினைகள், பாலியல் துஸ்பிரயோகம், பராமரிப்பு மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்ட ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், பெண்களின் பிரச்சனைகள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டு அவர்களுக்குரிய சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், இலவசமாக வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் இதன்போது செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இச்சட்ட ஆலோசனை முகாமிற்கு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து பாதிக்கப்பட்ட சட்ட ஆலோசனை  அவசியமான பெண்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இச்சட்ட ஆலோசனை முகாமினை ஏற்பாடு செய்துகொடுத்த அருவி பெண்கள் வலயமைப்பிற்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

அருவி பெண்கள் வலயமைப்பானது  மாவட்ட மக்களின் நலனினைக் கருத்திற்கொண்டு பல்வேறு சமூக நல செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: