4 Feb 2023

மட்டக்களப்பில் இடம்பெற்ற 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பில் இடம்பெற்ற 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு.

இலங்கை  ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மட்டகளப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று  (04) வெபர் மைதானத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,  மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாண்டு வாத்திய இசை முழங்க, இலங்கை இராணுவத்தின் கடெற் படை மற்றும் சாரணிய மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரினால் 75வது சுதந்திர தின உரையும் நிகழ்த்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களினால் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக  பிரிவுகளில் இடம்பெற்று வரும் வீட்டுத்தோட்டம், மரநடுகை மற்றும் சிரமமான திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுள்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள், 231வது இராணுவ படைப்பிரிவின் பிரிகேட் கொமாண்டர்  திலூப பண்டார உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,  ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் கோட்டைப்பூங்காவை அண்மித்த பகுதியில் மர நடுகை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.














SHARE

Author: verified_user

0 Comments: