7 Apr 2021

மட்டு முயற்சியான்மை" பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும்

SHARE

மண்முனை வடக்கு பிரதேச செயலக "மட்டு முயற்சியான்மை" பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும் புதன் கிழமை (07) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சு.ஸ்ரீகாந்த் கலந்து சிறப்பித்திருந்தார்.


அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விற்பனைக் கண்காட்சி கூடமானது அதிதிகளினால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.

இதன் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் இவர்களது முயற்சியை பாராட்டியதுடன், இவர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக் கூடிய உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய திணைக்களங்களின் அதிகாரிகளை பணித்திருந்தார். 

குறித்த நிகழ்வில் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எல்.பிரசந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான ச.பிரணவசோதி, அ.சுதர்சன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் த.சத்தியசீலன், கணக்காளர் சீ.புவனேஸ்வரன், மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் சி.வினோத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

வருடாந்தம் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திவரும் "மட்டு முயற்சியான்மை" விற்பனையும் கண்காட்சியுமானது இவ்வருடமும் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இக்கண்காட்சியில் கைத்தறி உற்பத்திகள், 

 கைப்பணிப்பொருட்கள், விவசாய உற்பத்திகள், சேதனைப் பசளை உற்பத்திகள் மற்றும் உணவு உற்பத்திப் பொருட்கள் அடங்கலாக பெருமளவான உற்பத்திப் பொருட்களின் காட்சிக் கூடங்கள் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: