24 Mar 2021

சமூர்த்திப் பயனாளிகளுக்கு சமூர்த்தி கடன் திட்டங்களின் நன்மைகள் தொடர்பில் அலுவலர்கள் இன்னமும் விழிப்புணர்வூட்ட வேண்டும். மாவட்டப் பணிப்பாளர் அமிர்தகலா பாக்கியராசா

SHARE

சமூர்த்திப் பயனாளிகளுக்கு சமூர்த்தி கடன் திட்டங்களின் நன்மைகள் தொடர்பில் அலுவலர்கள் இன்னமும் விழிப்புணர்வூட்ட வேண்டும். மாவட்டப் பணிப்பாளர் அமிர்தகலா பாக்கியராசா.

சமூர்த்தி உதவித் திட்டத்தின் கீழ்  உதவி பெறும் சமூர்த்திப் பயனாளிகளுக்கு சமூர்த்தி கடன் திட்டங்களின் நன்மைகள் தொடர்பில் வெளிக்கள அலுவலர்கள் இன்னமும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்  என மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் அமிர்தகலா பாக்கியராசா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு nhசவ்வாய்க்கிழமை இடம்பெற்றபொழுது அவர் அதில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஏறாவூர் மத்தி ஏறாவூர் கிழக்கு ஆகிய இரண்டு சமூர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சமூர்த்திப் பணிப்பாளர் அமிர்தகலா மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமூர்த்தி வங்கிகளும் 14  சமூர்த்தி மகா சங்கங்களும் இருக்கின்றன.

அவற்றிலே இந்த வங்கியோடு சேர்த்து 13வது சமூர்த்தி வங்கி கணினி மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது.

இந்த சமூர்த்தி வங்கிகளை ஆராய்ந்து பார்க்கும்போது நிகழ் நிலையிலே செயற்படுத்திய 5வது பிரதேச செயலகமாக ஏறாவூர் நகரப் பிரதேச செயலகம் உள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

சமூர்த்தி கடனுதவிகள் குறைந்த வட்டி வீதத்திலே அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பயனாளிகளுக்கு இந்தக் கடன் திட்டங்கள் சம்பந்தமான விழிப்புணர்வுகள் போதாமலுள்ளது.

அதனால் இந்த விடயத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தங்களது கடப்பாட்டை காட்ட வேண்டும்.

குறைந்த வட்டி வீதத்திலான சமூர்த்தி கடனுதவிகள்பற்றி பயனாளிகளுக்கு தெரியப்படுத்தி அவர்களது தொழிலையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசின் சமூர்த்தி வங்கி கடன் திட்டங்களை நாங்கள் சரியான முறையிலே பயன்படுத்துவோமாக இருந்தால் தனியார் நுண் நிதி நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் நுண் நிதிக் கடன் கொடுப்பனவுகளில் மக்கள் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்பட மாட்டார்கள்.

நுண் நிதி நிறுவனங்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் மாபெரிய சக்தியாக சமூர்த்தித் திணைக்களப் பணியாளர்கள் திகழ முடியும். இந்த விடயத்தில் சமூர்த்திப் பயனாளிகளும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.





SHARE

Author: verified_user

0 Comments: