14 Jan 2021

“பாடசாலை உணவகத்தில் ஆரோக்கியமான உணவு” திட்டம் அமுலாக்கம்.

SHARE

பாடசாலை உணவகத்தில் ஆரோக்கியமான உணவு திட்டம் அமுலாக்கம்.

கல்வி அமைச்சு விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் நாளைய தலைவர்களான இன்றைய இளைஞர்களை ஆரோக்கியமுள்ளவர்களாக மாற்ற உதவும் என மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் தெரரிவித்தார்.

ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில் புதன்கிழமை 13.01.2021 இடம்பெற்ற பாடசாலை உணவகத்தில் ஆரோக்கியமான உணவு எனும் பயிற்சி வழங்கல் ஏறாவூரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெண்கள் விவசாய விரிவாக்க பாடவிதான உத்தியோகத்தர் குந்தவை ரவிசங்கர் பயிற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.

பாடசாலை உணவகத்தில் ஆரோக்கியமான உணவு  எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் பாடசாலை உணவகத்துக்கு ஆரோக்கியமான உணவுகள் தயாரிக்கும் செய்முறைப் பயிற்சிகள் இங்கு இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய விவசாய உதவிப் பணிப்பாளர் சித்திரவேல்

இளம் பராயத்திலிருந்தே மாணவர்களுக்கு சிறந்த உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் வீட்டிலிருந்தும் அடுத்ததாக பாடசாலையிலிருந்தும் இதனை அறிமுகப்படுத்த வேண்டும்.

பாரம்பரிய வகையில் உற்பத்தியான உப உணவுகளைக் கொண்டு போஷாக்கான உணவுகளைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளை நாம் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இது பத்தாவது பயிற்சி நெறியாகும். அடிப்படையிலே மாணவர்கள் மத்தியிலே இந்த போஷாக்கு இயற்கை உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் அது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

20 வயதுக்குள்ளாகவே ஏதாவதொரு தொற்றா நோய்க்குஇலக்காகக் கூடிய சூழலுக்குள் தற்போதைய இளஞ் சமுதாயம் அகப்பட்டுள்ளது.

எனவே அத்தகையதொரு நச்சுச் சூழலை மாற்றுவதற்காகவும் சிறந்த உணவுப் பழக்க வழக்கத்தைக் கைக் கொள்வதற்காகவும் இரசாயனம் கலந்த உணவுகளைத் தவிர்ப்பிதற்காகவும் நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டியுள்ளது. என்றார்.

பாடசாலை உணவகத்தில் ஆரோக்கியமான உணவு  எனும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு திட்டம் அமுலாக்கப்பட்டு வருவதாக  பெண்கள் விவசாய விரிவாக்க பாடவிதான உத்தியோகத்தர் குந்தவை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறந்த விவசாய நடைமுறைத் திட்ட (புழழன யுபசiஉரடவரசந Pசயஉவiஉந - புயுP) போதனாசிரியை நிலக்ஷp அன்ரனி ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி பிரதி அதிபர் எம்.எல்.எம். அஷ்ரப் பாடவிதான உத்தியோகத்தர் எஸ். மாறன், அலுவலர் எம்.சி.எம். றியாழ்  பயிலுநர்களான .எப். இர்பானா எஸ். சபேசன்  உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையிலுள்ள 10121 அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 4.1 மில்லியன் மாணவர்களில் 20.6 வீதம் பேர் நிறை குறைந்தவர்களாகவும் 7.09 வீதமான மாணவர்கள் குள்ளத்தன்மை கொண்டவர்களாகவும் 2.04 வீதமானோர் மேலதிக நிறை கொண்டவர்களாகவும் காணப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இந்தத் திட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: