20 Oct 2020

முந்திரிப் பருப்பு விற்பனை நிலையத்தைக் கொள்ளையடித்த சந்தேக நபர்கள் பொலிஸார் வசம் சிக்கினர்.

SHARE

(எச்
.ஹுஸைன்)

முந்திரிப் பருப்பு விற்பனை நிலையத்தைக் கொள்ளையடித்த சந்தேக நபர்கள் பொலிஸார் வசம் சிக்கினர்.
ஏறாவூர் நகர மத்தியில் அமைந்திருந்த முந்திரிப் பருப்பு விற்பனை நிலையத்தைக் கொள்ளையடித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஏறாவூர் நகர் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையோரமாக  அமைந்திருந்திருக்கும் முந்திரிப் பருப்பு விற்பனை நிலையம் செவ்வாய்க்கிழமை 20.10.2020 அதிகாலை திருடப்பட்டிருந்ததாக அதன் உரிமையாளர் ஜே.எம். ஹனீபா ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

தான் வழமையாக விற்பனை முடிந்து திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றதாகவும் மீண்டும் கடையைத் திறப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலையில் சென்று  பார்க்கும்போது கடையின் கூரை வழியாக திருடர்கள் நுழைந்து கடை கொள்ளையிடப்பட்டிருந்ததை அவதானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடையிலிருந்த சில்லறைக் காசுகள் நூறு ரூபாய் பணத்தாள்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட முந்திரிப் பருப்புகளும் ஒரு திறன் பேசியும் ஒரு தராசும் களவாடப்பட்டிருந்ததாக முந்திரிப் பருப்பு விற்பனை நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து காணொளிக் கமெராவின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த ஏறாவூர் துப்பறியும் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரைக் சற்று நேரத்தில் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திறன்பேசி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: