28 Sept 2020

சிறுபான்மை மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். - முன்னாள் பா.உ. ஶ்ரீநேசன்

SHARE

சிறுபான்மை மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.........ஜி.ஶ்ரீநேசன்,முன்னாள் பா.உ,மட்டக்களப்பு.
இந்நாட்டில் பல்லின மக்கள் வாழுகின்றார்கள் என்பதைத் தற்போதைய அரசாங்கம் உணர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை, மேலும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. பேரினப்பிற்போக்குவாதிகளின் கருவியாகவே அரசு செயற்படுகின்றது. ஓரினப் பெரும்பான்மை இனந்தான் இந்நாட்டுக்கே உரித்தான இனம் என்ற தவறான போக்கில் அரசு இயங்குகின்றது.தமிழ் பேசும் மக்கள் இதனை நன்குணர வேண்டும்.அதேவேளை,ஜனநாயக வாதிகளும் இனத்திற்கப்பால் இவ்வரசாங்கத்தின் போக்குகளை உணரவேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டடமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடையம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது…

அரசாங்கத்தின் பெட்டிப்பாம்புகளாக ஒட்டி உழலும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள்,அரசாங்கத்தின் ஒவ்வொரு கெடுதியான செயலுக்கும் பொறுப்புக் கூறவேண்டும்

தற்போது அரசின் அடக்குமுறைக்கான சட்டங்கள்,திட்டங்கள் ஆரம்பித்து விட்டன.கடந்தகாலத் துன்பதுயரங்களை நினைத்துத் துக்கத்தை அனுட்டிப்பதற்கான,அழுவதற்கான அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகின்றது.தொல்லியல் இடங்களைக் கண்டறிதல் என்ற போர்வையில் தமிழ் பேசுனர்களின் காணிகளைஅபகரித்து,பேரினமயமாக்கலுக்கான திட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் காட்டுத்தர்பார்,அடிதடிகள்,வக்கிர நடத்தைகள் அரங்கேறுகின்றன.அரசாங்கம் இவற்றை கண்டும் காணாமல் நடந்துகொள்கின்றது.

அடாவடியாகத் தாக்குகின்ற எவரையும் தாக்குவதற்கும்,தற்காத்துக்கொளவதற்கும் பாதிக்கபடும் ஒவ்வொரு பிரசைக்கும் உரிமையுண்டு என்பதைத்த் தாக்குதலாளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காருண்ணியம்,கண்ணியமற்ற எந்த மதத்தலைவரும் காவியுடை தரிப்பதற்கு அருகதையற்றவர்களாவர்.எல்லா மதங்களையும் நாம் மதிக்க வேண்டும்.ஆனால்,எந்த மதவெறியனையும் எவரும் மதிக்க வேண்டியதில்லை.

பௌத்தம் மதிக்கத்தக்க மாண்புமிக்க மதமாகும். சௌகரியமான அரச போகத்தினைத் துறந்து,கடினமான ஆன்மீக ஞானத்தை அடைந்தவர்தான் கௌதம புத்தர்.அதேவேளை,அசோகச் சக்கரவர்த்தியின் போர்வெறி தவிர்த்து,நேர்நெறி காட்டியவர் உபகுப்தர்  என்னும் இந்திய பிக்கு ஒருவர்.இதனால் அவர்கள் மதிக்கப்படுகின்றார்கள் துதிக்கப்படுகின்றார்கள்.ஆயின்,அவர்கள் பௌத்த மத்த்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.இதனால் ,பௌத்தத்தை ஏனைய மத்த்தவர்களும் மதித்தார்கள்.ஆனால்,சுமணரத்ன பிக்கு  அவர் சார்ந்த மத்த்திற்கு இழுக்கை ஏற்படுத்தி வருகின்றார்.இதனை பௌத்தபீடங்களும்,பௌத்தசாசன அமைச்சருமான பிரதமர் மகிந்தராஜபக்‌ஷ அவர்களும் கவனத்திற்கொள்ள வேண்டும்.இல்லையேல்,இந்தப் பிக்குவின் செயற்பாடுகளுக்கு அரசு அங்கீகாரம் அளித்ததாகக்க் கருதவேண்டி ஏற்படும்.

மேலும்,20ஆவது யாப்புத்திருத்தம் என்பது  மக்களின் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்ற,சர்வாதிகாரத்தை மாலையிட்டு வரவேற்கின்ற தப்பான செயற்பாடாக அமைந்துவிடும்.

எனவே,தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க விரும்பும் சகல ஜனநாயகவிரும்புனர்கள் உட்பட,ஜனநாயக அமைப்புகள் எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கண்கெட்ட பின்னர் சூரியநமஸ்காரம் செய்ய முடியாது.ஆயின் கண்கள் கெடாமல் பாதுகாத்துக்கொள்வோம்.சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்காக  மக்களுக்கான ஜனநாயகத்தைப் பலிகொடுப்பதென்பது அதிகாரவர்க்கத்தின் சுயநலச் சிந்தனையே தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.இறுதியாக,ஜனநாயக நாட்டில் மனிதவுரிமை முக்கியமானது.சர்வாதிகார நாட்டில் ஆட்சியாளனுக்கு மிக்குயர் இறைமை முக்கியமானது.நமது நாடு ஜனநாயக நாடு என்பதை மக்கள் மறவாமல் இருக்க வேண்டும்.எதை விதைக்கிறோமோ அதை அறுக்க வேண்டி வரும்.ஐ.தே.கட்சி,ஶ்ரீ.சு.க விதைத்தவற்றை ரணிலும்,மைத்திரியும் அறுவடை செய்து நட்டப்பட்டுத் தட்டுப்பட்டு நிற்கிறார்கள்.இப்போது பொதுஜனப்பெரமுன விதைக்கிறார்கள்.விதைத்தது வினையாக இருந்தால்,அறுவடை தினையாகக் கிடைக்காது.

சிறுபான்மை இனங்கள் மட்டுமல்ல,சகல முற்போக்குசக்திகளும் விழிப்புடன் இருந்து வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.இது காலத்தின் கட்டாயக் கடமையாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: