20 Sept 2020

இயற்கை எமக்குத் தந்த வளங்கள் சூறையாடப்படுவதை எவரும் வெறுமனே பார்த்துக் கொண்டு வாழாதிருக்க முடியாது.

SHARE

இயற்கை எமக்குத் தந்த வளங்கள் சூறையாடப்படுவதை எவரும் வெறுமனே பார்த்துக் கொண்டு வாழாதிருக்க முடியாது.

மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் 

இயற்கை எமக்குத் தந்த வளங்கள் சூறையாடப்படுவதை எவரும் வெறுமனே பார்த்துக் கொண்டு வாழாதிருக்க முடியாது என மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சூழலியல் நீதியும் காலநிலை மாற்றமும்” எனும் தொனிப் பொருளில் அமைந்த  வதிவிடக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 20.09.2020 இடம்பெற்றது.

சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே. முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் செயற்பாட்டாளர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி அப்துல் அஸீஸ்  மேலும் தெரிவித்ததாவது,

சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் செயற்பாடுகள் காலத்திற்குப் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

இயற்கை வளங்களைச் சூறையாடுவோர் எந்தத் தரப்பினராக இருந்தாலும் நாம் சமூகமாக அணிதிரண்டு அத்தகைய செயற்பாடுகளை எதிர்த்துத்தான் ஆக வேண்டும்.

இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கி உதவி ஒத்தாசை புரியும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

மக்கள் பலத்தைக் கொண்டு இந்த கருமங்களை ஆற்ற முடியும்.

அதற்கு இயற்கை வளங்கள், மனித உரிமைகள். நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி மக்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

அந்த அறிவைக் கொண்டுதான் அநியாயங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

இந்த விடயத்தில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்கெனவே தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் அந்த அமைப்பு இயற்கை வளங்களைச் சூறையாடும் நபர்களுக்கெதிராக வழக்குகளையும் தாக்கல் செய்து சூழலைப் பாதுகாக்க போராடி வருகின்றது.

சட்டத்திற்கு முன்னால் யாவரும் சமம் என்ற அடிப்படையில் நாட்டிள்ள சட்ட திட்டங்களை யாரும் மீற முடியாது.

சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் எம்மை மதித்துப் பாதுகாக்கும்.

ஆகவே, நாட்டிலுள்ள சட்டத்தை ஒரு தனி மனிதனோ குழுவோ சமூகமோ அனுசரிக்கின்றபோது அவர்களுக்கு உதவுதற்காகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவினராகிய நாம்  இருக்கின்றோம்.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காத்திரமான முறையில் முன்வைக்கின்றபோதுதான் நாங்கள் அதனை வெற்றி கொள்ள முடியும்” என்றார்.

இந்நிகழ்வில் சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி பங்குபற்றுநர்களாலும் வளவாளர்களாலும் செயற்பாட்டாளர்களாலும் அதிதிகளாலும் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் நிருவாக உத்தியோகத்தர் இந்திரன் ஜெயசீலி, பணிப்பாளர் சபை உறுப்பினர் ரஜனி ஜெயப்பிரகாஸ்  வெளிக்கள உத்தியோகத்தர் எஸ். புவனேந்திரராஜா உட்பட இன்னும் பல வளவாளர்களும் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: