24 Aug 2020

புதிய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் காப்பீடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் நஸீர் அகமட் எம்.பி

SHARE
புதிய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் காப்பீடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் 
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் நஸீர் அகமட்   எம்.பி.அரசியலமைப்பில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதற்கான அரசின் முயற்சிகள் சிறுபான்மை சமூகங்களுக்கு ஆரம்பத்திலேயே கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

வீதாசாரத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத் தொடரில் கொள்கைப் பிரகடன உரையாற்றிய ஜனாதிபதி,(பலமில்லாத பாராளுமன்றத்தால் நிலையான கொள்கை வகுக்க முடியாது, அடிப்படைவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசாங்கத்தால் நாட்டுக்கு நன்மை ஏற்படாது.எனவே நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்த வீதாசாரத் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் ) என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது;1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பல நன்மைகள் உள்ளன.நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை,ஐந்து வீத வெட்டுப்புள்ளி,வீதாசாரத் தேர்தல் என்பவையும் இதிலுள்ள நன்மைகளே.கடுமையான போட்டி,அரச செல்வாக்குகளுக்கு மத்தியிலும் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் தெரிவாகின்றமை இம்முறையூடாகத்தான்.மேலும் சிறிய மற்றும் பிராந்திய கட்சிகளை இத்தேர்தல் முறையே பலப்படுத்துகிறது.

பரந்தளவில் சிறந்த ஜனநாயகத்தையும் கொண்டுள்ள இம்முறை,சகலருக்கும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. இருப்பினும்  வீதாசாரத் தேர்தலால்,பேரம்பேசலைக் கையிலெடுத்துள்ள சிறுபான்மையினர் அரசாங்கத்தை ஆட்டிப்படைத்து அச்சுறுத்துவதாக மேலாதிக்க சிந்தனையுள்ள சிலர் பிழையாக அர்த்தம் கற்பிக்கின்றனர்.

1994ஆம் ஆண்டு மாத்திரமே கூட்டரசாங்கம் அமைந்ததை இவர்கள் கருத்திற் கொள்ளவில்லை. இதற்குப் பின்னரான தேர்தல்களில் பலமான அரசாங்கமே அமைந்தது. இந்தத் தேர்தல் முறையால் அடையவே முடியாதென்று பலரும் கூறிய மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இன்று இந்த அரசு பெற்றுவிட்டது.

எனவே புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு காப்பீடாகவுள்ள வீதாசாரத் தேர்தலையும் உள்வாங்க வேண்டும்.குறித்த ஒரு சமூகத்தினரை மட்டுமன்றி சகல சமூகத்தவரையும் திருப்திப்படுத்தும் அரசியலமைப்பே அவசியம்.ஒரே நாடு ஒரே கொள்கையில் பயணிக்கும் இந்த அரசு பக்கச்சார்பாக நடந்து கொள்ளக் கூடாதென்பதே எங்கள் விருப்பம் .

எனவே மாற்றம் செய்யாதிருக்கத் தீர்மானித்துள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம், தவணைக்காலம் என்பவற்றுடன் வீதாசாரத் தேர்தல் முறையையும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹ்மட் கோரியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: