10 Aug 2020

எமது இமாலய சாதனைக்கு ஒத்துழைத்து அனைத்து மக்களுக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகளை – ரி.எம்.வி.பி.பொதுச் செயலாளர் பிரசாந்தன்.

SHARE

எமது இமாலய சாதனைக்கு ஒத்துழைத்து அனைத்து மக்களுக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகளை – ரி.எம்.வி.பி.பொதுச் செயலாளர் பிரசாந்தன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம் தலைவரையும் கட்சியையும் ஏற்றுக்கொண்டு இமாலய வரலாற்று சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்த ஒவ்வொரு பிரம்மாக்களுக்கும் எம் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் திங்கட்கிழமை (10) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…

குறிப்பாக இரவும் பகலும் ஊண் உறக்கம் மறந்து கட்சி கொள்கையை தம் கொள்கையாகக் கொண்டு எம்மோடு களத்தில் நின்ற வேட்பாளர்கள், கட்சியின் உயர்பீட, செயற்குழு, பிரதேச அமைப்பாளர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், எம் உயிருக்கு நிகரான கட்சியின் போராளிகள் அனைவருக்கும் தலைவர் சார்பாகவும் கட்சி சார்பாகவும் சிரம்தாழ்த்தி நன்றியினை நவில்கின்றேன். 

எழுபது வருடகால பாரம்பரிய மேலாக்கத்திற்கு எதிராகவும், மேலைத்தேசத்தின் முகத்திரையையும் கிழித்தெறிந்து எமக்கான தலைமைத்துவத்தை இந்நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக உறுதி செய்த எம்மக்களுக்கு இவ்வெற்றியை காணிக்கையாக்குகின்றேன்.

ஐந்து வருட காலமாக உரிய விசாரணைகள் இன்றி அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நிமிர்த்தம் நல்லாட்சியினை கூட்டுச்சதியில் மேலாதிக்கத்தின் ஆசிர்வாதத்துடன் தலைவர் சிறைப்படுத்தப்பட்ட போதும் தலைவருக்காய் தன்னுயிரை தானம் செய்யவும் துணியும் தொண்டர்களை பெற்றிருப்பது எமது வரம். அத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த சிற்பிகளாய் ஒவ்வொரு கட்சி தொண்டனும் களத்தில் நின்று இவ்வரலாற்று திருப்பத்தை நிகழ்த்த காரணமாய் இருந்தனர்.

தலைவரின் சிந்தனையான மட்டக்களப்பின் நிலைபேறான அபிவிருத்தி எனும் எண்ணக்கருவை ஏற்றுக்கொண்ட எம்மக்கள் எமக்கான அரசியல் அதிகாரத்தையும் உரிமையையும் சமதளத்தில் பெற்றுக் கொள்ள தங்களின் பிரதிநிதிகள் எனும் இமாலய பொறுப்பை எம்மீது சுமத்தியுள்ளனர். இப்பொறுப்பை சிரமேற்கொண்டு எம்மாவட்டத்தின் நிலைபேறான அபிவிருத்தியையும் எம்மக்களுக்கான அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க எம்மை ஆகுதியாக்குவோம் என்று தலைவர் சார்பாகவும், கட்சியின் சார்பாகவும் உறுதிமொழி ஏற்கின்றோம்.

பணபலம், போலித்தேசியம், வெற்றுக் கோஷங்கள், நடைமுறை சாத்தியம் இல்லா கொள்கைகள் போன்றவற்றை நிராகரித்து எம்மக்கள் வழங்கியுள்ள இவ்வெற்றியின் கனத்தையும் பெறுமதியையும் நாம் நன்கறிவோம்.

எம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விதந்துரைக்கப்பட்ட எம்மாவட்டத்தின் நிலைபேறான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க இணக்க அரசியல் செய்யும் அதே நேரம் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை உறுதி செய்யவும் நியாயமான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவும் உள்ளிருந்து பேசவும் தயங்க மாட்டோம்.

தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள இம்மிகப்பெரும் வெற்றியானது பேரினவாத நிகழ்ச்சி நிரலை எளிதாக்கக்கூடியது. ஆனாலும் சமகொள்கை கொண்ட பங்காளிகளுடனும் சர்வதேச தொடர்புகளுடனும் எமக்கான நியாயமான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க தயங்கப்போவதில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வின் அடிப்படை அலகான மாகாணசபையை வென்றெடுத்து அதனை பயன்படுத்தி எமக்கான நியாயமான அடிப்படை தீர்வை பெறும்வரை நாம் ஓயப் போவதில்லை. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.SHARE

Author: verified_user

0 Comments: