15 Jul 2020

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த திறன் உபாயம் மற்றும் செயல்திட்டம் அறிமுகம்

SHARE
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த  திறன் உபாயம் மற்றும் செயல்திட்டம் அறிமுகம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான புதிய சுற்றுலாத்துறை திறன் மூலோபாயம் மற்றும் செயல்திட்டம் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் புதன்கிழமை(15) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்திற்கமைவாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் Skills for Inclusive Growth (S4IG) நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டமானது திறனபிவிருத்தியின் வாயிலாக இலங்கையிலுள்ள பயிலுனர்கள் மற்றும் தொழில் வழங்குனர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் சேவைத் தரத்தினை மேம்படுத்துவதற்கென, பல்வேறு பயிற்சி வழங்குனர்கள், தொழில்முறை அமைப்புகள், மாவட்ட கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த வியாபாரங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த செயல்திட்டமானது, உள்ளுர் பயிற்சி வழங்குனர்கள் வாயிலாக சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்வழங்குனர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதுடன், பயிலுனர்களின் திறனபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றது.

கோவிட் 19 தொற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையரின் வாழ்வாதாரங்களை, சுற்றுலாத்துறையிலான மறுமலர்ச்சியின் வாயிலாக மீட்கும் முயற்சிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவங்கள் மற்றும் தரமான சேவைகளை வழங்குவதன் மூலம் வருமான மார்க்கங்களை அதிகரித்துக்கொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், (S4IG) இன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முகாமையாளர் மரீனா உமேஷ், மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரி அதிபர் ரீ.பாஸ்கரராஜா, மியானி தொளிநுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய பாதர் ஜீ.மகிமதாஸ், நைட்டா நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.எஸ். மௌலானா உட்பட திறனபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.   










SHARE

Author: verified_user

0 Comments: