31 Jul 2020

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பெண்களுக்கான விஞ்ஞாபனம் கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினால் முன்வைப்பு.

SHARE

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பெண்களுக்கான  விஞ்ஞாபனம் கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினால் முன்வைப்பு.
இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பெண்களுக்கு, பெண்களின் உரிமைகள் தேவைகளை மையப்படுத்திய  விஞ்ஞாபனம் ஒன்றை தமது அமைப்பு தயாரித்தக் கையளித்து வருவதாக கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்களிடம் கையளித்துள்ள அந்த விஞ்ஞாபனத்தில் பெண்களது உரிமைகளை நிலைநாட்டும் பல விடயங்கள் குறிப்புணர்த்திக் கூறப்பட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்தல் வாக்காளர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ள பெண்களாகிய நாம் உங்களுக்குக் கூறுவது மனிதர்கள் அனைவரதும் உரிமைகளையும், சமத்துவத்தையும் அச்சுறுத்தும் வகையில் உள்நாட்டு அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் மாறிவரும் -  அதேவேளை உலக நடப்புகளும் மாறக்கூடிய சமகாலத்தில் இப்பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றது.

இவ்வேலளையில் பெண்களாகிய உங்களிடம்  பெண்களதும் ஓரங்கட்டப்பட்ட மக்களதும் உரிமைகளை உறுதிப்படுத்த முதன்மைப்படுததப்பட்ட அக்கறை தேவையாகவுள்ளது.

அதிலும் கொரோனா போன்ற, இயற்கை, சுகாதாரரீதியிலான அச்சுறுத்தல்களால் ஏற்படும் தாக்கங்கள் இவை அனைத்தினதும் விளைவான பன்முகத் தாக்கங்கள் பற்றி அதீத கவனமும் ஒருங்கிணைந்த முன்னெடுப்புக்களும் தேவை.

அந்தவகையில் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையில் 61 சத வீதமான மக்கள் கடனாளிகளாகவே உள்ளார்கள் (புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கை- IES  - 2016)

மொத்த தொழில்துறையில் 58 வீதமான் மக்கள் முறைசாரா துறையிலேயே உள்ளார்கள். (தொழிலாளர்படை கணக்கெடுப்பு (Labour force survey  அறிக்கை 2018)

இலங்கையில், கொரோனாவினால் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக 30 சத  வீதமான குடும்பங்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவினை குறைத்துள்ளனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டு வன்முறைகளே அதிகளவில் இடம்பெறுகின்றன.

இந்த வருடம் ஜனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் உள்ள ஒரு பெண்கள் அமைப்பிற்கு மாத்திரம் 96 பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 87 சம்பவங்கள் வீட்டு வன்முறைகளாகும்.

அத்துடன் கொரோனாவினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தபோது மட்டும் 23 வீடடு வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இவை பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களாகும். பெண்கள் சுதந்திரமாக சுயாதீனமாக சம உரிமையுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய வாய்ப்புகளை இது மட்டுப்படுத்துகின்றது

பெண்களின் உடல், உள, மறு உற்பத்தி நலன்கள் மீதான தாக்கங்களை ஏற்படுத்துவதன் ஊடாக முழுச் சமூகத்தையும் பாதிக்கின்றது. சமூகத்தில் அவர்களின் பங்குபற்றலை மட்டுப்படுத்துகிறது.

மேற்படி பின்னணியிலே நாம் அரசியல், அரசியலமைப்பு, சட்டம், சட்ட, நடைமுறை உட்பட குடும்பம், கல்வி, சுகாதாரம், சொத்துடைமை கொள்ளல், வாழ்வாதாரங்கள், வேலைவாய்ப்பு, பணியிடங்கள் ஆகிய அனைத்து தளங்களிலும் பெண்கள் உரிமைகளை அனுபவிப்பதையும் அவர்களின் சமத்துவத்தையும உறுதிசெய்தல் வேண்டும என்பதை வலியுத்துகின்றோம்” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: