29 Jul 2020

உயிரையே துச்சமென நினைத்துத் போராடிய எமதினத்தினை இந்தத் தேரர்களோ அல்லது சிங்கள பேரினவாத அரசோ எந்தச் சூழ்ச்சியினாலும் விலைகொடுத்து வாங்க முடியாது. - கூட்டமைப்பு வேட்பாளர் மா.உதயகுமார்.

SHARE
உயிரையே துச்சமென நினைத்துத் போராடிய எமதினத்தினை இந்தத் தேரர்களோ அல்லது சிங்கள பேரினவாத அரசோ எந்தச் சூழ்ச்சியினாலும் விலைகொடுத்து வாங்க முடியாது. - கூட்டமைப்பு வேட்பாளர் மா.உதயகுமார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீதும் அரச அதிகாரிகள் மீதும் பல அடாவடித்தனங்களை மேற்கொண்ட ஒரு பௌத்த தேரர் தற்போது நடைபெற உள்ள இந்தப் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டு வருவதானது வேடிக்கையாக இருக்கின்றது. இவர் உண்மையிலேயே தேர்தலில் வெல்ல வேண்டுமானால் தென்னிலங்கையில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.

ஒருபக்கம் தொல்பொருள் செயலணி என்ற போர்வையில் பௌத்த மேலாதிக்கம் எமது இந்துமத தொன்மை வாய்ந்த ஆலயங்களையும் அடையாளச் சின்னங்களையும் அழித்து பௌத்த மதத்தினை தமிழர் பிரதேசங்களில் பரவலாக்கவும் இதனூடாக தமிழ் மக்களின் நிலங்களை மேலும் கபழிகரம் செய்யவும் எத்தனிக்கின்ற இந்த நேரத்தில் இந்த பௌத்த தேரரின் அரசியல் உட்பிரவேசமானது பலசந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகின்றது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை (28) மாலை, கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…


ஆரம்ப காலங்களில் அதாவது 60 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள்தான் பெரும்பாண்மை சமூகமாக அங்கு வாழ்ந்தார்கள் ஆனால் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள பௌத்த பேரினவாத அரசானது பல சிங்கள குடியேற்றங்களைச் செய்து அந்த மாவட்டங்களில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தினைக் குறைத்ததன் காரணமாக எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கும் அதிகமான அளவு பெரும்பாண்மை இன சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு  தெரிவாகின்றார்கள் இதேபோன்றதொரு ஆக்கிரமிப்பு செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வருமோ என்ற ஐயப்பாடு எமக்கிருக்கின்றது. 


இந்த நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களாகிய நாம் 70 வருடங்களுக்கு மேலாக எமது உரிமையினைப் பெறுவதற்காக போராடி வருகின்றோம் இந்தக் காலங்களில் எமது விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்காக பல தந்துரோபாய நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் மேற்கொண்டு வந்ததனையும் நாம் காணலாம் எனவே இந்தச் சூழ்ச்சிகள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல ஆயுதப் போராட்ட காலத்தில் பல ஆயுதம் தரித்த ஒட்டுக் குழுக்களை இந்த பேரினவாத அரசுகள் உருவாக்கி எமது இளைஞர்கள் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் சேர்வதனைத் தடுப்பதற்கு முயற்சித்த போதும் அந்த முயற்சியானது இளைஞர்கள் மென்மேலும் அதிகமான எண்ணிக்கையில் போராட்ட இயக்கங்களில் வந்து சேர்வதற்கு அது வழிவகுத்ததனையும் நாம் காணலாம். 

ஆகையால் உயிரையே துச்சமென நினைத்து போராடிய எமதினத்தினை இந்தத் தேரர்களோ அல்லது சிங்கள பேரினவாத அரசோ எந்தச் சூழ்ச்சியினாலும் விலைகொடுத்து வாங்க முடியாது.

எதிர்வரும் ஆவணி மாதம் 5ஆம் திகதி நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் அவர்களின் முகவர்களுக்கும் நீங்கள் அடிக்கின்ற சாட்டையாகவும் அது ஒரு சாவு மணியாகவும் அமைய வேண்டும் என அன்பாக வேண்டி நிற்பதோடு ஆவணி 6 ஆம் திகதி வெற்றிவாகையுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன் எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.     



SHARE

Author: verified_user

0 Comments: