15 Jul 2020

தமிழ் மகா நடிகர்களை இனியும் நீங்கள் சுமந்து கொண்டிருக்க முடியாது - வேட்பாளர் சுவீகரன் நிஷாந்தன்.

SHARE
தமிழ்மக்களுக்கு தீர்வு வருகின்றது என்று ஒவ்வொரு வருடமும் பொய் அறிவிப்புக்களை வெளியிட்டுவிட்டு இப்போது வெறும் கையுடன் இன்று தமிழ்மக்கள் முன் வந்து மீண்டும் வாக்கு கேட்கும் இந்த தமிழ் மகா நடிகர்களை இனியும் நீங்கள் சுமந்து கொண்டிருக்க முடியாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள்   -  வேட்பாளர் சுவீகரன் நிஷாந்தன்.
தமிழ்மக்களுக்கு தீர்வு வருகின்றது என்று ஒவ்வொரு வருடமும் பொய் அறிவிப்புக்களை வெளியிட்டுவிட்டு இப்போது வெறும் கையுடன் இன்று தமிழ்மக்கள் முன் வந்து மீண்டும் வாக்கு கேட்கும் இந்த தமிழ் மகா நடிகர்களை இனியும் நீங்கள் சுமந்து கொண்டிருக்க முடியாது என
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள் என்று    தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சுவீகரன் நிஷாந்தன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.


நேற்று மாலை (14) மட்டக்களப்பு வோய்ஸ் ஓவ் மீடியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ் வேண்டுகோளை விடுத்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் தாயகம் மட்டக்களப்பு மண்ணில் வாழும் நீங்கள் உங்கள் ஆதரவினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு வழங்குவது உங்கள் தார்மீக கடமையாகும்.

தமிழ் இனத்திற்கு நேர்மையும் துணிவும் கொண்ட தலைமை இன்றைய நிலையில் கட்டாயமாக தேவை என்பதை உணர்ந்தே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் என்றும் தமிழ் தேசியத்தின் பாதையில் இருந்து தடம் மாறாத 5 தமிழ் கட்சிகள் இணைந்து ஓர் அணியாக நிற்கின்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
தமிழ் தேசியத்தின் சுதந்திரத்தையும்,தமிழர் தாயகத்தின் சுயாட்சியையும் ஜனநாயக வழியில் அரசியல் போராட்டத்தின் ஊடாக வென்றெடுத்து நிலை நாட்டிட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தமிழ் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.

எம் இனத்தின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த பின்னரும் எம் இனத்தின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு எதனையும் வழங்காமல்   ஆட்சி நடத்தி வரும் சிங்கள ஆதிக்க சக்திகள் அதிகாரத் திமிருடனும் முரட்டுப் பிடிவாதத்துடனும் தமிழ் மண்ணை அடக்கி ஆழ்வதில் தீவிரமாக முனைந்துள்ளன என்பதை எம் மக்கள் அறிவார்கள்.
தமிழ் மண்ணில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவம் நிலை கொண்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் 94 பேர் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக   சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாடி வருந்துகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக சிங்கள பேரினவாதிகள் மறைந்திருந்து எமது நிலங்களையும், எமது வரலாற்று சுவடுகளையும் ஆக்கிரமித்து கபளிகரம்  செய்து வருகின்றார்கள்.

எமது ஆலயங்களின் சூழலில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு எமது வழிபாட்டு உரிமைகளுக்கு சபால் விடுக்கப்படுகின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் கடந்த நாலரை ஆண்டுகள் ஆட்சி நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அரசியற் தீர்வைப் பற்றிப் பேசியபடியே தமிழர் தாயகத்தை சிங்கள குடியேற்றத் திட்டங்களால் மேலும் ஊடுருவி இராணுவ வலிமையுடன் எம்மை அடக்கி ஆள்வதில் காலம் கடத்தியுள்ளது.

அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பாராளுமன்ற சுக போகங்களுக்காக தமிழ் மக்களின் நலனை அடகு வைத்து அரசியல் நடாத்தி வந்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அதற்கு முண்டு கொடுத்து காப்பாத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர் உரிமைகளில் சிலவற்றையாவது நிலைநாட்டுவதற்கு கிடைத்த சகல சந்தர்ப்பங்களையும் அடுத்தடுத்து தவறவிட்டுள்ளனர்.

அத்துடன் தாம் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநல நோக்குடன் அரசாங்கத்துடன் பேரம் பேசி கோடிக்கணக்கான பணத்தை தொகுதி அபிவிருத்தி என்ற பெயரில் அரசியல் இலஞ்சமாகப் பெற்று அதனை முறையாகவும் ஒழுங்காகவும் மக்களின் நலனுக்காக செலவழிக்காமல் அரசியல் விளம்பரத்திற்காக வீண்விரயம் செய்து தமது சுயரூபத்தையும் பொருப்பற்ற தன்மையையும் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த நாலரை வருடங்களாக சாதிக்க முடியாத விடயங்களை எல்லாம் இனிச்சாதித்துக் காட்டுகின்றோம் என்று இவர்கள் இப்போது முழங்குவது உங்கள் அனைவரையும் ஏமாற்ற முயற்சிக்கும் அரசியல் மோசடி நடவடிக்கையே ஆகும்.

இதோ தீர்வு வருகின்றது என்று ஒவ்வொரு வருடமும் பொய் அறிவிப்புக்களை வெளியிட்டுவிட்டு இப்போது வெறும் கையுடன் உங்கள் முன் வந்து மீண்டும் வாக்கு கேட்கும் இந்த மகா நடிகர்களை இனியும் நீங்கள் சுமந்து கொண்டிருக்க முடியாது.


பொய்த்துப் போய்விட்ட கோசங்களையும்,புரட்டுப் பேச்சுக்களையும் புறக்கணித்து வாய் வீச்சுக்களையும் வார்த்தை ஜாலங்களையும் நிராகரித்து நல்லதோர் தலைமையின் கீழ் செயற்படும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்காளராகிய நீங்கள்   அனைவரும் தேர்வுசெய்ய வேண்டும்.

சுதந்திரம் எமது பிறப்புரிமை என்ற தெளிவோடும், திடத்தோடும் நாம் எல்லோரும் ஒற்றுமையோடு ஒரே கொடியின் கீழ் அணி திரண்டு அரசியல் வழியில் ஜனநாயகப் பாதையில் எமது விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடாத்தி வெற்றி காண வேண்டும்,வெற்றி கண்டே தீர வேண்டும்.
இல்லையேல் இத்தனை காலமும் நீங்கள் சந்தித்த துன்பங்களும் அனுபவித்த துயரங்களும் புரிந்த தியாகங்களும் அர்த்தமற்றுப் போய் விடும்.எம் இனத்தின் எதிர்காலமும் இருண்டு விடும்.

எனவே மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய எம் மட்டக்களப்பு வாழ் தபால் மூல வாக்காளர்களே நீங்கள் அனைவரும் பொறுப்போடு சிந்தித்து திட்டவட்டமாக நீங்கள் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவானது முன்னனாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையின் கீழ் மீன் சின்னத்தில்  இலக்கம் 7 இல் போட்டியிடும் என்னையும் எனது சக வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்களித்தால் எம் மண்ணின் எதிர்காலம் சுபீட்சமடையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமும் இல்லை எனத்தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: