12 Jul 2020

அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு என்ற போலியான பரப்புரைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது – த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார்.

SHARE
அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு என்ற போலியான பரப்புரைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது – த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார்.
அரச சார்புக் கட்சிகளின் அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு என்ற போலியான பரப்புரைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (12) மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டு கருத்துரைக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன 5 உறுப்பினர்களுக்காக 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இவர்களில் சில கட்சிகளினூடாக தழிழர்கள் பலர் போட்டியிடுகின்றனர் அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு என்ற போலியான பரப்புரைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் பலர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசிக்கலாம் ஆனால் உறவுகளுக்காகவோ அல்லது நட்புக்காகவோ அல்லது ஊரான் என்பதற்காகவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு அபிவிருத்தி என்ற மாயையை நம்பி எந்தவொரு வாக்காளரும் வாக்களிக்கக்கூடாது அப்படி யாராவது வாக்களித்தால் எமக்கு கிடைக்க வேண்டிய ஆசனத்தை வேறு இனத்தவருக்கு தாரை வார்ப்பதற்கு ஏதுவாக அது அமையும்.

எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மாவட்டங்களுக்கிடையிலான அபிவிருத்திகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்க கட்சிக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அந்த மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசு நிறுத்துவதில்லை.
ஆனால் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராகப் போட்டியிடுகின்ற கட்சிகளும் அதன் தமிழ் வேட்பாளர்களும் பெறுகின்ற வாக்குகளால் தெரிவாகின்ற மாற்று இனத்தவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு சில அபிவிருத்தித் திட்டங்கள் வேலைவாய்ப்புகளில் தமது இனத்தவருக்கு முன்னுரிமை அளிப்பதனைக் காணலாம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை முன்னிலைப் படுத்தி தமிழ் மக்களை பலவீனமாக்குவதற்கான செயற்பாடாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.

இப்போது எமக்கு எதிராகப் போட்டியிடுகின்ற சில தமிழர்களில் ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் மற்றும் இருவர் பிரதி அமைச்சர்களாகவும் கடந்த காலங்களில் இருந்தபோதுதான் நில ஆக்கிரமிப்பு உச்சக் கட்டத்தில் இருந்தன இதனால் எமது பல காணிகள் பறிபோனதையும் காணலாம். அதேபோன்று பல தொழில் வாய்ப்புகளில் எமது இளைஞர்கள் புறக்கணிப்பு செய்யப்படடார்கள்.
ஆனால் இப்போது கூறுகிறார்கள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதேச அபிவிருத்தியினையும் இளைஞர்களுக்கான ஆயிரக் கணக்கான தொழில் வாய்ப்புகளையும் தங்களால் வழங்க முடியுமென அப்போது முடியாததை இப்போது எவ்வாறு செய்வது இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவே இவர்கள் எம்மை மீண்டும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். 

எமது வேட்பாளர்களும் புத்திஜீவிகளும் பல முறை கூறியதனைப் போன்று த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பேரினவாத அரசின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடையின்றி செயற்படுத்துவதற்கான ஆணையினை பெறுவதற்காக கழமிறக்கப்பட்ட கட்சிகளாகும் இக்கட்சிகளின் தலைவர்கள் (பிள்ளையான் கருணா) போன்றவர்கள் ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக அறிகின்றோம்.

மாறாக எஞ்சி இருக்கின்ற தமிழ் தேசிய வாதிகளையும் எமது கட்சியான த.தே.கூட்டமைப்பினையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நாடு பூராகவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே இவர்கள் ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.
எனவே அன்பான தமிழ் வாக்காளப் பெருமக்களே எமது ஆணையினைக் கொண்டு எம்மையே அழிப்பதற்கான கபட நாடகத்தினை பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது இதற்காக மூன்றாம்நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை இதற்காக அரசு பயன்படுத்தியுள்ளதனையும் நாம் அறிவோம்.

ஆகையால் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தழிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் சிங்கள பெரினவாதத்திற்கும் அவர்களின் கைகூலிகளுக்கும் அடிக்கின்ற ஒரு சாட்டையாக அமைய வேண்டும் என நான் அன்பாக வேண்டிக் கொள்கின்றேன் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.  




SHARE

Author: verified_user

0 Comments: