23 Jul 2020

கட்டுரை : நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்டம் கள நிலவரம்.

SHARE
(வ.சக்திவேல்) 

கட்டுரை : நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்டம் கள நிலவரம்.
நாட்டில் எதிர்நோய்கியுள்ள கொவிட் - 19 எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இலங்கையின் 9 வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில் கட்டுப்பணங்களைச் செலுத்திய அரசியற் கட்சிகளும், சுயேட்சைக்கு ழுக்களும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில் இல்லத் தரிசிப்புக்கள், குழுக் கலந்துரையாடல்கள், கிராம மட்ட தலைவர்களுடனான கலந்துரையாடல்கள், உள்ளிட்ட பலவாறாக இடம்பெற்று வருவதையும், சிலர் பொது இடங்களிலும், அவர்களது பதாகைகளை ஒட்டி உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

தேர்தலுக்கான ஆயத்தங்களில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும், உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகமும் ஈடுபட்டுள்ளதாக, மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்புக்கமைய நடைபெறவுள்ள இத்தேர்தலில் 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது. இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்தி 92 ஆயிரத்தி 809 வாக்காளர்களும், கல்குடாத் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்தி 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 97 ஆயிரத்தி 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

அதனடிப்படையில் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மன்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுணதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோரளைப்பற்று வாளைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், Nhறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப் பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன்  தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 416 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக மட்டக்களப்புத் தொகுதியில் 185 வாக்குச்சாவடிகளும், கல்குடா தொகுதியில் 155 சாவடிகளும், பட்டிருப்பு தொகுதியில் 116 வாக்குச் சாவடிகளும் நிறுவப்படவுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் 05  ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அன்று (வியாழக்கிழமை நன்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேட்புமனுக்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இப்பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக, 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் 3 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதியில்
16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள்  இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளளர்.

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மௌபிம ஜனதா பக்ஸ, ஜனசத பெரமுன ஆகிய 3 அரசியல் கட்சிகளினதும்,  அரசரெத்தினம் யுகேந்திரன், பி.மதிமேனன், மு.அ.நிசார்தீன் ஆகியோர் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.


வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சத்தியப் பிரமானம் சமர்ப்பிக்கப்படாமை, வேட்பு மனுவில் எட்டு அபேட்சகர்களது பெயர் குறிப்பிடப்பட வேண்டிய விடத்து 7 அபேட்சகர்களது பெயர்கள் மாத்திரம் குறிப்பிட்டமை போன்ற காரணங்களுக்காகவே இவ்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதக்காக வேண்டி 304 பேர் போட்டியிடுகின்றனர். இம்முறை பொது கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவு ஐந்து பேர்களை கொண்ட குழுவினரால்த்தான் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவு மக்களின் வீடுகளுக்கு செல்லும்போது சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவது அவசியமானதாக கருதப்படும் எனவும் வேட்பாளர்களுக்கு இம்முறை தேர்தல் சட்ட விதிகளுக்கு அப்பால் மேலதிகமாக சுகாதார விதிமுறைகள் அடங்கிய கையேடுகளும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்பாக்கப்படுகின்றது.

சுகாதார திணைகள உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளமையினால் இம்முறை வாக்கு எண்னும் நடவடிக்கை பகலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.  


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2015 பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, ஞானமுத்து சிறினேசன், சதாசிவம் வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஆகிய மூவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; அலிஸாஹிர் மௌலானாவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது


மட்டக்களப்பில் தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றது.

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறை களுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் மூண்றாம் கட்ட வாக்களிப்பு  வியாழக்கிழமை (16)  அமைதியான முறையில் நடைபெற்றது.

இதன்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் சகல வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினரும் இந்த தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர். இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டினர்  


இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர் களும், பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத் தர்களும், கல்குடா தேர்தல் தொகுதியில் 2426 அரச உத்தி யோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தபால் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது. வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதிவரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் 29ஆந் திகதிக்குப்பின் தபால் அலுவலகங்களில் தத்தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.


பொதுத் தேர்தல் 2020 இற்கான முன்ஏற்பாடுகளை அவதானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு விஜயம்

இது இவ்வாறு இருக்க பொதுத் தேர்தல் 2020 இற்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதன்கிழமை (15) விஜயம் ஒன்றை மேற்கொண்டது.

பிரதி தேர்தல் ஆணையாளர்களான எம்.எம்.எஸ்.கே.பண்டார, எஸ்.அட்சுதன் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையிலான தேர்தல் கடமை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் குழுவினை  மாவட்ட செயலகத்தில் சந்தித்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் பற்றி கலந்துரையாடினர்.
அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்… இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புகள் எவ்வித தங்குதடையுமின்றி சுமுகமாக இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட 4,5,6 ஆகிய தினங்களில் தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வாறு செயற்படுவது என திட்டமிடப்பட்டுள்ளதுடன் குறிப்பாக கொவிட் 19 கெரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து வாக்காளர்களையும், உத்தியோகத்தர்களையும் பாதுகாப்பதற்கான முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட விருப்பதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அத்தியாவசிய சேவை, தேர்தல் முறைப்பாடுகளை கையேற்கும் பிரிவு, தேர்தல் கடமைக்கான ஊழியர்களை நியமிக்கும் பிரிவு, வாக்கொண்ணும் மண்டப ஒழுங்கு, போக்குவரத்து, நலன்புரி, கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற அனைத்து பிரிவுகளினதும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆந் திகதி பொதுத் தேர்தலினை நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து வாக்காளர்களையும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர் குழுவினையும் பாதுகாக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டுமென பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.அட்சுதன் அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.

எது எவ்வாறு அமைந்தாலும் என்றுமில்லா வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக வேண்டி 16 அரசியற் கட்சிகள், மற்றும் 22 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக மொத்தம் 304 பேர் பேட்டியிட்டாலும், அனைவரும் பல பிரசார பணிகளை மேற்கொள்கின் போதிலும், மக்கள் நன்கு சிந்தித்து வாக்கிப்பதன் மூலம் எதிர்வரும், 5 வருடங்களில் மக்களின் அபிலாசைகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொள்ளக்கூடிய தலைவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்


மட்டக்களப்பில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் 90 ஆக அதிகரிப்பு

பொதுத் தேர்தல் 2020 நடைபெறுவதற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இதுவரை 90 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 22 முறைப்பாடுகளும், மட்டக்களப்பு, வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தலா 20 முறைப்பாடுகளும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 3 முறைப்பாடுகளும், வாகரை பொலிஸ் பிரிவில் 2 முறைப்பாடுகளும், வவுணதீவு மற்றும் மங்களகம பொலிஸ் பிரிவுகளில் தலா ஒரு முறைப்பாடும் பொதுவாக 1 முறைப்பாடுமாக மொத்தம் 90 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பாக 37 முறைப்பாடுகளும், அரச ஊழிளர்கள் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பாக 15 முறைப்பாடுகளும், அன்பளிப்பு வழங்கள் தொர்பாக 13 முறைப்பாடுகளும், கூட்டம் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக 12 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 6 முறைப்பாடுகளும், நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், சொல் அச்சுறுத்தல் செய்தமை, தாக்குதல் செய்தமை, பொய்ப்பிரச்சாரம் செய்தமை, அஞ்சல் வாக்கு தொடர்பாக, சட்டவிரோத நிகழ்வு ஏற்பாடு செய்தமை, வாக்காளர் உபசரிப்பு போன்றவை தொடர்பாக தலா ஒவ்வொரு  முறைப்பாடுகளுமாக 90 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம்முறைப்பாடுகளில் தேர்தல் சட்டவிதி மீறல் தொடர்பாக 88 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 87 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய 3 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 329 வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன

நடைபெறவிருக்கும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 329 வாகனங்கள் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இத்தேர்தல் நடவடிக்கைக்காக 428 வாக்குச் சாவடிகள், 74 வலயங்கள் மற்றும் தேர்தல்கடமைகளில் ஈடுபட்டுள்ள விசேட பிரிவுகளுக்குமாக இந்த 329 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக இம்மாவட்டத்திலுள்ள அரச திணைக்கள பிக்கப் வாகனங்கள் 149, இலங்கை போக்கு வரத்து சபைக்குரிய பஸ் வண்டிகள் 50, தனியார் மினி பஸ்கள் 30, சிறியரக தனியார் வேன்கள் 30 உட்பட கொழும்பிலிருந்து ஏனைய திணைக்கள பிக்கப், ஜீப் போன்ற வாகனங்கள் 70 உள்ளடங்களாக மொத்தம் 329 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். 

இதேவேளை பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆந்திகதி நடைபெறவுள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகள் தேர்தலுக்கு மறுதிணமாகிய ஆகஸ்ட் 6 ஆந்திகதி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மற்றும் மகாஜனக் கல்லூரிகளில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: