11 Jun 2020

மட்டக்களப்பில் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தினை அதிகரிக்க அரச அதிபர் தீவிர நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பில் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தினை அதிகரிக்க அரச அதிபர் தீவிர நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கை மற்றும் மறுவயல் பயிற்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்கமைய இம்மாவட்டத்தில் குறித்த தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 

இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் புதன்கிழமை (10) கூட்டப்பட்டது. இந்த விசேட கூட்டத்தில் நெல் மற்றும் ஏனைய மறு வயல் பயிர்களை எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது. 

இந்த விசேட சந்திப்பில் விவசாயிகள் தரப்பில் சிறுபோக நெல் அறுவடையின் பின்னர் இலகுவாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் உரிய வேளைக்கு உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வணவு செய்தல், தட்டுப்பாடின்றி இலவச மாணிய உரத்தினை சகல பகுதி விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுத்தல், சட்டவிரோத மண்அகழ்வினை தீவிரமாக தடைசெய்தல், காட்டுயானை தொல்லையிலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாத்தல், தரமான விதைநெல்லை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறித்த மாவட்ட விவசாய சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்திருந்தனர். 

இப்பிரச்சினைகளைக் கேட்டறிந்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா விவசாயிகளின் கோரிக்கைளில் அதிகமானவற்றுக்கு உடனடித் தீர்வு வழங்கியதுடன் ஏனைய கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். இதன்போது புளுக்குணாவி குளத்தினை அண்டிய நெற்செய்கைக் கண்டங்களுக்கு வரட்சியால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அம்பாரை மாவட்டத்திலிருந்து நீர்ப்பாசனத்தைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்த அரசாங்க அதிபரின் பெரும் முயற்சிக்கு மாவட்ட விவசாய சம்மேளன பிரதிநிதிகளால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இங்கு கருத்து வெளியிட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, கொரோனா தொற்றினால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாதிருக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கமைய நாட்டின் உணவு உற்பத்தியினை அதிகரிக்க அரசாங்கம் கடும் முயற்சிகளை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டமும் உணவு உற்பத்தியில் கூடிய பங்கினைச் செலுத்த வேண்டியுள்ளது. எனவே மாவட்ட விவசாயிகள் எதிர்காலத்தில் கூடிய அக்கரையுடன் விவசாய நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்த வேண்டும், தனது வழிகாட்டலில் விவசாய உற்பத்தி சார்ந்த அனைத்துத் திணைக்களங்களும் அவதானிப்புடன் செயல்படுமென்றும் குறிப்பிட்டார். 

இவ்விசேட சந்திப்பில் காணிப்பிரிவு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர். வை.பீ.இக்பால் உட்பட மாவட்ட விவசாய சம்மேளன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். 










SHARE

Author: verified_user

0 Comments: