8 May 2020

கட்டுரை : உலக செஞ்சிலுவை தினம் இன்று (மே.08)

SHARE
 (சக்தி)

கட்டுரை : உலக செஞ்சிலுவை தினம் இன்று (மே.08) 
உலகின் பெரும்பாலான பகுதிகளில், இயற்கையும், மனித நடவடிக்கைகளும் துன்ப துயரங்களை விளைவிக்கும்போது, ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டும் அமைப்புத்தான் செஞ்சிலுவைச் சங்கம் ஆகும். அதுபோன்று உலகில் இன்னும் மனித நேயம் மாய்ந்துவிடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஒரு மனித நேய அமைப்பு செஞ்சிலுவைச் சங்கமாகும். அந்த அற்புத அமைப்பை உலகிக்குத் தந்தவர் ஜீன் ஹென்றி டுனாட் (Henry Dunant)  அவர்கள்.
செல்வந்தராகப் பிறந்து செஞ்சிலுவைச் சங்கத்திற்காக தனது சொத்துக்களையெல்லாம் செலவு செய்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோனவர்தான் ஜீன் ஹென்றி டுனாட் அவர்கள்.

1828 ஆம் ஆண்டு மே 08 ஆம் திகதி சுவிஸ்லாந்தில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார் டுனாட். அவரது பெற்றோர்கள் மதப்பற்று கொண்டவர்கள் என்பதனால் டுனால்டும், சிறுவயது முதல் அவரது மதத்தில் அதிக ஈடுபாடு காட்டிவந்தார். ஒருவேளை அந்த மதப்பற்றுத்தான் செஞ்சிலுவை அமைப்பை உருவாக்கவும் அவருக்கு உந்து சக்தியளித்திருக்க வேண்டும் எனலாம். 

உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறிய அவர் சிறிதுகாலம் ஜெனீவா வங்கியில் கடமை புரிந்து வந்துள்ளார். அவருக்கு 26 வயதானபோது வர்த்தகத்துறையில் காலடியெடுத்து வைத்தார். அவர் அப்போது அல்ஜீரியாவுக்குச் சென்று சுவீஸ் காலணியான செற்றீஸ் என்ற இடத்தில் நிலப்பரப்பொன்றை வாங்கினார். அதில் விவசாயம் செய்தும், பண்ணை நடாத்தியும், தனது தந்தையைப்போல் பெரும் செல்வந்தராக வேண்டும் என அவர் விரும்பினார். அவரது பண்ணைக்குத் தேவையான தண்ணீரை குழாய் மூலம் கொண்டுவர வேண்டியிருந்தது. பக்கத்திலிருந்த நிலப்பகுதியோ பிரான்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தான நிலப்பகுதியாகும். எனவே அங்கு நீர் குழாய்களை அமைப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் அனுமதியை அவர் பெறவேண்டியிருந்தது. அவர் அப்போது பலமுறை பிரான்ஸ் அதிகாரிகளைச் சந்தித்தும் பலன் கிடைக்காததால், அப்போது பிரான்ஸை ஆண்டுவந்த மன்னன் 3 ஆம் நெப்போரினை நேரில் சந்தித்து அனுமதிபெற முடிவெடுத்தார் டுனாட். அந்த முடிவுதான் அவரது வாழ்க்கையைத் திசை திருப்பியது. 

1859 ஆம் ஆண்டு  ஆஸ்த்திரியப் படைகளை இத்தாலியிலிருந்து துரத்தியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது பிரான்ஸ் இராணுவம். அந்த இராணுவத்தை வழிநடாத்தி போரில் ஈடுபட்டிருந்தார் 3 ஆம் நெப்போலியன். இத்தாலியில்  அமைந்திருந்த போர் தலைமையகமான சொல்பரினோ முகாமிற்கு நேரடியாக்ச சென்றார் டுனாட்.  நேப்போலியனைச் சந்திக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என டுனாட் ஊகித்திருந்த காரணத்தினால் அவர் செல்லும்போது அதிகளவு பணத்தையும் எடுத்துச் சென்றிருந்தார்.

இவ்வாறு அவர் போகும் வழியில் அங்கு நடைபெற்ற போரின் அவலங்களை அவர் நன்கு அவதானித்தார். பாதைகள் உடைபட்டு, பாலங்கள், மதகுகள் என்பனவும், தகர்க்கப்பட்டும் இருந்தன. ஒருவாறு மாட்டு வண்டியின் துணையுடன் அவர் சொல்பரினோவிற்கு அருகிலுள்ள கஸ்றிக்லியோன் எனும் சிற்றூரை அடைந்தார். அந்த ஊரிலிருந்து மலை உச்சி ஒன்றிலிருந்து அவர் கண்ட காட்சிகள் அவரின் மனதைக் கலங்கடித்தன.

19 ஆம் நூற்றாண்டின் மிகவும் மூர்க்கத்தனமான போர்களின் ஒன்றையே அவர் கண்ணுற்றார். அந்தப் போர்களத்தில் 3 இலட்சம்போர் பங்கு கொண்டனர், தொடர்ந்து 16 மணித்தியாலங்கள் போர்மூண்டது. 10000 மேற்பட்டோர், மடிந்தனர், 40000 பேர் காயப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த அவலத்தைக் கண்ட டுனாட்டிற்கு வந்த வேலை மறந்து போனது, மனித நேயம் பீறிட்டு எழுந்தது. காயமடைந்தவர்கள் அந்த சிற்றூறில் இருந்த தேவாலயம் ஒன்றிற்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர். அங்கு விரைந்த டுனாட் எதுவித மருத்துவ அனுபவமும் இல்லாதிருந்தும்கூட காயங்களை தண்ணீரால் சுத்தம் செய்யத் தொடங்கினார். அந்த ஊரிலிருந்த 2 மருத்துவர்களை அழைத்து மருத்துவம் செய்யச் சொன்னார் டுனாட். இறக்கும் தருவாயிலிருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பங்களுக்கும் தகவல்களை அனுப்பினார். தான் கொண்டு வந்திருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து உணவளித்தார். மேலும் மருத்துவர்களை வரவழைத்து அவர்களுக்கும் பணம் செலவு செய்து வைத்தியம் செய்தார். இவ்வாறு ஒரு மாதம் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்டவர்களை கவனித்திருந்தார் டுனாட். 

பின்னர் சுவிஸ்லாந்து திரும்பிய டுனாட்டிற்கு, தன்னுடைய அல்ஜீரியப் பண்ணை பற்றி முற்றிலும் மறந்து பேனது. இரவு பகலாக போரின் அவலங்களே அவரது கண்முன்னே தோன்றின. இவ்வாறு உலகில் எத்தனை போர்களங்களில் எத்தனை வீரர்கள் இறந்திருப்பார்கள் என நினைந்து, நினைந்து இரங்கினார். இனிமேல் உலகில் எந்தவொரு மூலையிலும் போர் நிகழ்ந்தாலும், அதில் காயப்படும் வீரர்களுக்கு முதலுதவி வழங்கி அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் அனைத்துலக அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஒரு பொறி அவரின் மனதில் தோன்றியது.

பின்னர் போரில் தான் கண்ட காட்சிகளை “சொல்பரினோ நினைவலைகள்” எனும் ஒரு நூலை எழுதினார் டுனாட். அதிலே அவர் போரில் பாதிக்கப்படுபவர்கள், காயப்படுபவர்கள், எவராக இருந்தாலும், அவர்களுக்கு, முதலுதவியளிக்கப்பட்டு, சிகிச்கை வழங்கப்படல் வேண்டும், இவ்வாறானவர்களுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்களும், தாதியர்களும், தங்குதடைகளின்றி அனுமதிக்கப்படல் வேண்டும், போர்க்காலத்தில் உதவ பொதுமக்களுக்குப் பயிற்சியளிக்கப்படல் வேண்டும். அவ்வாறான திட்டங்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். எனவும் அந்த நூலில் அவர் எழுதியிருந்தார். அவரது சொந்தச் செலவில் அவர் அச்சிட்டு வெளியிட்ட முதல் 2 பதிப்புக்கள், வெகுவாக விற்றுத் தீர்ந்தன. 

அதன் காரணமாக டுனாட் அடுத்த பதிப்பில் அவரது கோரிக்கையையும் எழுதினார். அதன்படி போர்களின்போது மட்டுமின்றி எந்தவொரு நாட்டில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிபத்து, போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்தாலும், அங்கு நேரடியாக நிவாரணப்படிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும், அதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவரது எண்ணக்கருத்தை வெளியிட்டார். பின்னர் ஐரோப்பா முழுவதும் விஜயம் செய்து அவ்வாறானதொரு அமைப்பு உருவாவதற்கு, ஆதரவு திரட்டினார். அவரது அயராத உழைப்பால் 1864 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22 ஆம் திகதி, 12 நாடுகள்கூடி ஜெனிவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டு “அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உதையமானது.” அந்தச் சங்கம் சுவிஸ்லாந்தில் உருவானதால் அந்த நாட்டுக் கொடியின் வண்ணங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு, (வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிற குறோஸ்) அதுவே செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியாக மாற்றப்பட்டது. 

அச்சங்கத்தின் தேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், 
தனது சொத்துக்களையெல்லாம் செலவு செய்து மிகுந்த ஏழ்மைக்கு உள்ளானார் டுனாட். உலகிற்கு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிக் கொடுத்து இறுதியில் அவரிடம் பணம் இல்லாமல் போனதால், உலகம் அவரை ஒட்டுமொத்தமாக மறந்துபோனது. சிலசமயங்களில் அடுத்தவேளை உணவுக்காகவும் கஸ்ற்றப்பட்டதாகவும், சில குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. சுமார் 30 ஆண்டுகள் ஒதுங்கியே வாழ்ந்த அவரை 1895 ஆம் ஆண்டு அடையாளம் கண்டு உலகிக்கு அறிவித்தார் ஒரு பத்திரிகையாளர். பின்னர் 1901 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டுனாட்டிற்கு வழங்கப்பட்டது. ஏழ்மையில் இருந்போதும்கூட அவர் நோபல் பரிசுத் தொகையைப் பயப்படுத்தவில்லை. அவரது மரணத்திற்குப் பின்னர் அவரது பரிசுத் தொகையின் அரைவாசியை சுவிஸ்லாந்து ஏழைகளுக்கும், மற்றைய அரைவாசிப் பகுதியை நோர்வே ஏழைகளுக்கும் பயன்படுத்த ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார். 

கடைசிவரை அந்த உன்னத மனிதர் 1910 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி 82 வது வயதில் மரணமடைந்தார். தற்போது செஞ்சிலுவைச் சங்கம் இல்லாத நாடுகள் இல்லாத அளவிற்கு அந்த அமைப்பு உலகமெங்கும் விரிவடைந்து வியாபித்திருக்கின்றது. மக்கள் மத்தியில் வரும் எவ்வித துயரங்கள் என்றாலும் துயர் துடைப்புச் சேவை என்றால் முதன் முதலில் அனைவரினதும் நினைவுக்கு வருவது செஞ்சிலுவை அமைப்புத்தான். வருடந்தோறும் ஹென்றி டுனாட்டின் பிறந்த தினமான மே 08 ஆம் திகதி, செஞ்சிலுவைச் சங்க தினமாக அனுஸ்ட்டிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது.

ஜீன் ஹென்றி டுனாட் இவ்வளவு பெரியசேவைகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்குக் காரணம், மனுக்குலத்தின் இன்னல்களைக் கழைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையும், துயர் துடைப்புக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்ற மனித நேயமும், தடைகளைக் கண்டு துவண்டு போகாத மனோ தைரியமும்தான். அவ்வாறு உயரிய சிந்தனையும், மனித நேயமும், மனோதைரியமும் இணையும்போது, ஒருவரால் எதுவித துயரங்களையும் துடைக்க முடியும், எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும், எனலாம்.


ஜீன் ஹென்றி டுனாட் இவ்வுலகிற்குத் தந்த செஞ்சிலுவை இயக்கத்தின் கொள்கைகளான, 

“மனித நேயம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுயாதீனம், தொண்டர் சேவை, ஒருமைப்பாடு, சர்வதேசமயம்,” ஆகிய கொள்ககைகளின் கீழ் செஞ்சிலுவை அமைப்பு செயற்பட்டுக் கொண்டு வருகின்றது.

மனித நேயம் (Humanity)

யுத்தக்களத்தில் பாகுபாடின்றி உதவிகளை மேற்கொள்ளும் உணர்வை தன்னகத்தே கொண்டு தேசிய, சர்வதேச ரீதியில் மனிதர்கள் எங்கு துயரங்களுக்கு உள்ளாயினும் அவற்றை நீக்கவும் தடுக்கவும் மனித நேயத்தின் மூலம் முயற்சி செய்;கின்றது. இதன் உள்நோக்கமானது உயிருக்கும் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பை வழங்கி மனித வர்க்கத்திற்கு கௌரவத்தை உறுதிப்படுத்துவதாகும். இது எல்லா பொதுமக்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் சமாதானத்தை வளர்கின்றது.

பாரபட்சமின்மை (Impartiality)

இது தேசிய, இன, மத, வர்க்க, அரசியல் முதலான வேறுபாடுகளைக் கொண்டதல்ல. அனர்த்தங்களின்போது மிகவும் அவசரமாக உதவி தேவைப் படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, ஒவ்வொருவரின் துன்பங்களின் தேவைகளுக்கு மட்டும் உதவியளிக்க முயற்சிக்கின்றது.

நடுநிலைமை (Neutrality)

எல்லோருடைய நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைக்கும் பொருட்டு, கலகங்கள் ஏற்பட்ட வேளைகளில் தர்க்கத்திற்குரிய அரசியல் விடயங்களிலும் இன, மத, வேறு கொள்கைக் கோட்பாடுகளிலும் செஞ்சிலுவை அமைப்பு ஈடுபடுவதில்லை.

சுயாதீனம் (Independence)

செஞ்சிலுவை அமைப்பு சுதந்திரமானது. தேசிய இயக்கங்கள் மனிதாபிமான சேவையில் அரசாங்கத்திற்கு துணையாகவும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமையும் அதேவேளை இயக்கத்தின் சுயஅதிகாரத்தை எப்போதும் காப்பாற்றுவதற்கு அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும்.

தொண்டர் சேவை (Voluntary service)  

இச்சேவை எவ்வித இலாபம் ஈட்டும் நோக்கற்ற துயர் துடைக்கும் ஓர் அமைப்பாகும்.

ஒருமைப்பாடு (Unity) 

எந்த ஒரு நாட்டிலும் ஒரே ஒரு செஞ்சிலுவைச் சங்கமே இருக்க முடியும். 
அதன் கதவுகள் சகல பிரஜைகளுக்கும் திறந்திருப்பதுடன் நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதிலும் மனிதாபிமானச் சேவைகள் புரிதல் வேண்டும்.

சர்வதேசமயம்(Universality)

செஞ்சிலுவை அமைப்பு ஓர் உலகளாவிய நிறுவனம். அதில் அங்கம் வகிக்கும் சகல தேசிய சங்கங்களும் சம உரிமையுடன் பொறுப்புக்கள், கடமைகளைப் பகிர்ந்து கொண்டு தமக்குள் உதவிக் கொள்ளுதல் வேண்டும் எனும் விடையங்களின் கீழ் இலங்கை உட்பட உலகில் நாலா பாகமும் செஞ்சிலுவை  அமைப்பு தற்போது வியாபித்து, தன்னகத்தே கொண்டுள்ள சேவையை நிலை நிறுத்தி வருகின்றது. அவ்வமைப்பு இன்றய சர்வதேச செஞ்சிலுவை தினத்தில் நினைவு கூருவதில் வளர்ந்துவரும் சந்ததியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் எனலாம்.



SHARE

Author: verified_user

0 Comments: