27 Apr 2020

கட்டுரை: இடையூறு இன்றிய நீர் வழங்கல் பாவனையாளர்களின் கையில்.

SHARE
(எம்.எஸ்.எம்.சறூக்)

இடையூறு இன்றிய நீர் வழங்கல் பாவனையாளர்களின் கையில்.
தேசத்திற்கு உயிரூட்டும் அர்ப்பணிப்புமிக்க பணியினை தனது 270 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 343 நீர் வழங்கல் திட்டங்களினுடாக நாடு பூராகவும் 23 இலட்சத்திற்கு மேற்பட்ட இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் தொடர்ச்சியான நேரடி கண்காணிப்பின் கீழ் இலங்கையின் தர (SLS) மற்றும் சர்வதேச தர (ISO) நியமங்களுக்கேற்ப சுத்தமான நீரினை வழங்கி வரும் ஒரு தேசிய நிறுவனம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையாகும்.
சுத்தமான நீர் எமது ஆரோக்கியத்தில் ஆழமாக செல்வாக்கு செலுத்துவதனால் இச்சபையின் தொடர்ச்சியான பணி என்பது எமது தேசத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

தேசிய நீர் வழங்கல் சபை மூலம் வழங்கப்படுகின்ற ஒரு அலகு நீர் என்பது ஆயிரம் லீற்றர்களாகும். அவ்வாறு ஆயிரம் லீற்றர் நீரை சுத்திகரித்து விநியோகிப்பதற்காக இச்சபைக்கு சுமார் ரூ. 50  செலவாகின்றது.    ஆனால் பாவனையாளர்களிடமிருந்து ஒரு அலகுக்கான கட்டணமாக முறையே சமுர்த்தி பயனாளியாயின் ரூ. 05.00 ம் சாதாரண பாவனையாளராயின் ரூ. 12.00 ம் (பொருத்தமான வரிகளுடன்) அறவிடப்படுகின்றது. இதனை மேற்கூறப்பட்ட ஒரு அலகுக்காக செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் குறைந்ததோர் கட்டணமாக காணப்படுவதோடு நீர் வழங்கல் சபையினால் உற்பத்தி செய்யப்படும் நீர் வீடுகளுக்காக ஒரு சலுகை கட்டணத்திலேயே வழங்கப்படுகிறது. 

தேசிய நீர் வழங்கல் சபை சுத்தமான நீரை பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு அதாவது நீர் மூலத்திலிருந்து நீரினை உள்ளெடுத்தல் (Intake), சுத்திகரித்தல் (Treatment), விநியோகித்தல் (Distributing), இவைகளோடு இணைந்த இயக்குதல் மற்றும் பாராமரிப்பு (Operation & Maintenance) மின்சாரம்;, எரிபொருள் மற்றும் உதிரிபாயங்கள் போன்றவற்றிக்காக பல மில்லியன் ரூபாக்களை மாதாந்தம் செலவிட்டே மேற்கொள்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் குடிப்பதற்கு தகுந்த நீரை வழங்குவதற்காக வருடாந்தம் ரூ. 20,000 மில்லியனுக்கு மேற்பட்ட பணம் செலவிடப்படுகிறது. அத்துடன் மேற்குறிப்பிட்ட தொகைக்கு மேலதிகமாக நீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான உட்கட்டமைப்பு நிர்மாணப் பணிகளுக்கும் பாரிய தொகையிலான நிதி செலவிடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நாட்டின் தற்போதைய சு+ழ்நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கான வருமானம் குறைந்திருப்பதனால் தொடர்ச்சியான நீர் விநியோகத்தினை வழங்குவதில் பாரிய சவாலினை எதிர் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையில் நீர் கட்டணம் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தினை தொடரச்சியாக இடையூறு இன்றி முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர் பாவனையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தொகைகளை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களை வேண்டிநிற்கிறது.

இதனிடையே ‘‘மூன்று மாதத்திற்கான நீர் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை மற்றும் கொவிட் 19 இடர்காலத்தில் பாவிக்கப்பட்ட நீர் இலவசம்…’’ என போலியான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இவை யாவும் முற்றிலும் பொய்யான தகவல்கள் என்பதனை நீர் பாவனையாளர்கள் அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கொரோனாவினால் முடக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நீர் பாவனைக்கான கட்டணப்பட்டியல் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுவருவதுடன் சபையின் குறுந்தகவல் சேவையினூடாகவும் (பதிவுசெய்யப்பட்ட கணக்கிலக்கங்களுக்கு) அனுப்பப்பட்டுவருகிறது (தமது நீர் பாவனை தொகையை கண்டறிய, நீர் கட்டணப்பட்டியல் இலக்கத்தை 0719399999 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் ஊடாக மாதாந்த நீர் கட்டணத்ததை பெற்றுக்கொள்ளமுடியும் உ+ம்: 10/25/121/020/14  to 0719399999).
மேலும் இதுவரை நீர் பட்டியல் கிடைக்கப்பெறாதவர்களும் இறுதியாக வழங்கப்பட்ட பட்டியலிலுள்ள தொகைக்கு ஒப்பான தொகையினை செலுத்துமாறும் வேண்டப்படுவதோடு நிலமைகள் சீராகும் போது உங்களது நீர் மானி வாசிக்கப்பட்டு அதற்கான நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் ஏற்கெனவே செலுத்தப்பட வேண்டிய நிலுவைகளை கொண்டுள்ள பாவனையாளர்கள் அவைகளையும் முழுமையாக செலுத்துமாறும் நினைவூட்டப்படுகின்றனர். மேலும் உங்களது நீர் பட்டியல் குறித்த முறைப்பாடுகள், தெளிவின்மை காணப்படுமிடத்து அவற்றிக்கான தீர்வுகளை உரிய நீர் வழங்கல் நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

உங்களது நீர் பட்டியல் நிலுவைகள் பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் 1.5 சதவீத கழிவினை பெற்றுக்கொள்ள முடிவதோடு தாமதமாகும் நிலுவைகளுக்கு 2.5 சதவீதம் மேலதிகமாக அறவிடப்படும் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
தற்போதைய நிலையில் வீட்டிலிருந்து கட்டணத்தை செலுத்துவதற்கான புதிய முறைகளையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

- சபையின் www.waterboard.lk என்னும் இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி விண்ணப்பத்தின் மூலமும் (NWSDB SelfCare App/SMART pay app) எதுவித மேலதிக கட்டணமும் இன்றி செலுத்தமுடியும்.

- நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள Mobile App மற்றும் இணைய வங்கி சேவைகளையும் பயன்படுத்த முடியும் (மக்கள் வங்கி, இலங்கை வங்கி...).

- ஊரடங்கு தளர்த்தப்படும் தினங்களில் சபையின் பிரதான காரியாலயங்களிலுள்ள காசாளர் கருமபீடங்களிலும் வாரநாட்களில் செலுத்தலாம்.

இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளை முறையாக பேணுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   

மனித ஆரோக்கியத்தின் மறுவடிவமான சுத்தமான நீரை மக்களுக்கு வழங்கி மகத்தான பணியினை மேற்கொண்டுவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிதி நிலையினை கருத்திற்கொண்டு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தினை இன்னும் தாமதிக்காது செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு இதன் மூலம் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் எதுவித இடையுறுகளும்; இன்றி தொடர்ச்சியாக சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் சமூகத்தோடு இணைந்து பணிபுரியும் அமைப்புக்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடகங்களும் நீர் பாவனையாளர்கள் தாம் பாவித்த நீருக்கான கட்டணத்தினை விரைவாக செலுத்துவதற்கு அவர்களை ஆர்வமூட்டும் வகையிலான  பங்களிப்பினை நல்குமாறும் ஏதிர்பார்க்கப்படுகின்றது.


எம்.எஸ்.எம். சறூக்
சிரேஷ்ட சமூகவியலாளார்,
பிராந்திய முகாமையாளர் காரியாலயம்,
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை 
அக்கரைப்பற்று.
SHARE

Author: verified_user

0 Comments: