5 Apr 2020

கட்டுரை: ஒரு ஊடகவியலாளரின் ஆதங்கம்.... சரியா? தவறா?

SHARE


(துசா)

ஒரு ஊடகவியலாளரின் ஆதங்கம்.... சரியா? தவறா?சமூக ஊடக வலைத்தளங்கள் வருகையின் காரணமாக, பலர் ஊடகமொன்றின் பொறுப்பாளிகளாகவும், ஊடகவியலாளர்களாகவும், செய்தி வழங்குனர்களாகவும் மாறியிருக்கின்றனர். சமூக ஊடகங்களில் அங்கத்துவம் பெறும் அனைவருமே இந்நிலையை எட்டியிருக்கின்றனர். ஒரு முகநூல் கணக்கிருந்தால் சாதாரணமாக 5000நபர்களை அங்கத்தவர்களாக வைத்திருக்க முடியும். அவ்வாறாறெனின் அவர் இடுகின்ற செய்தியை நேரடியாக அந்நண்பர்கள் அனைவரும் பார்வையிடமுடியும். அதற்கு அப்பாலும் மற்றையவர் அதனை பகிர்கின்ற போது இன்னும் பலர் பார்வையிடுவர். அது அவ்வாறே நீண்டுகொண்டு செல்லும். இதைபோன்ற பல்வேறு தளங்களும் உள்ளன. இதனை நிர்வகிப்பவர்களாகவும், அதில் தகவல்களை பரப்புவர்களாகவும் பலரும் மாறியிருக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களின் வருகைக்கு முன்னர், ஊடகவியலாளர், ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்டவர்களிற்குள்ளேயே இருந்தது. தற்காலம், பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லா மூலை முடுக்குகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களை அறியக்கூடிய நிலையும், பல்வேறு விடயங்களை தேடிகற்க கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான வசதி கிடைத்தாலும், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதத்தில் தனிநபர்கள் பாதிக்கப்படுகின்ற நிலையும் இருக்கத்தான் செய்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் 19, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டின் மக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்பாட்டிற்கு நாட்டின் முக்கிய தூண்களாக கூறப்படுகின்ற ஊடகத்துறையினது பங்கும் அளப்பெரியதாக உணரப்படுகின்றது. நவீனத்துவ வளர்ச்சியின் வேகம், அச்சு ஊடகத்தினை ஒருகட்டத்தில் முடக்கிவிடும் என பலரும் பேசிக்கொண்டாலும், இலங்கை மற்றும் ஏனைய நாடுகளிலும் அச்சு ஊடகம் செயற்பட்டுக்கொண்டே வந்தன. ஆனாலும், எதிர்பாராத சூழல் இலங்கை நாட்டில், அச்சுவடிவில் பத்திரிகைகள் வெளிவர முடியாத துர்ப்பாக்கிய நிலையை அடைந்துள்ளது. இது எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவமே. இதனால், அனைத்து மக்களும் வலைத்தளங்கள் ஊடாகவும், வானொலி, தொலைகாட்சி ஊடாகவும் செய்திகளை, விடயங்களை அறியும் நிலையினைப் பெற்றிருக்கின்றனர். இது வரலாற்று  பதிவும் கூட.

இவ்வாறான சூழலில், சொல்லப்படுகின்ற விடயங்களை அவ்வாறே தாம்சார்ந்த ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குகின்ற செய்தியாளர்கள், செய்திகளை தணிக்கை செய்து அல்லது பத்தி எழுத்துக்கள் மூலமாகவும், கவிதைகள் மற்றும் ஏனைய வடிவங்களில் செய்திகளை அல்லது விடயங்களை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு வழங்குகின்ற ஊடகவியலாளர்கள் தமது சமூகம்சார்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது. அவ்வாறு சமூக பொறுப்புடனும், இக்கட்டான நிலையிலும் கூட தமது உயிர்களையும் கருதாது மக்களுக்கு சேவை செய்த, செய்கின்ற ஊடாகவியலாளர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். அதேவேளை சமூகபொறுப்புள்ள சேவையினை வழங்கும் ஊடகவியலாளர்களை சமூகம் மறந்து நிற்பதும் கவலையானதொன்றே.

இவ்வாறு சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள் ஊடகதர்மத்தினையும், ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடுகளும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால், சமூக ஊடகங்களுக்கு சொந்தக்காரர்கள் அவ்வாறான ஊடக ஒழுக்கநெறிகளை பின்பற்றுவதும் இல்லை. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிந்திப்பதுமில்லை. இந்நிலையில் ஊடக தர்மத்துடனும், ஒழுக்கநெறிகளுடனும் செயற்படுகின்ற ஊடகவியாலளர்கள், செய்தி ஆசிரியர்களிடம் வினவ வேண்டிய சில வினாக்களும் இருக்கத்தான் செய்கின்றன. தற்கால சூழலில் அவை பொருத்தமானதா? இல்லையா? என்பதற்கு அப்பால் கேட்க வேண்டிய தருணமாகவே அமைந்துள்ளது.

நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அச்சம்பவங்களை செய்தியாளர்கள் அனுப்புகின்றனர். அச்செய்திகளை பிரசுரிப்பதா? இல்லையா? தணிக்கை செய்வதா? இல்லையா? போன்ற தீர்மானங்களை எடுக்ககூடியவர்களாக செய்தி ஆசிரியர்களே இருக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களை நோக்கிய சில வினாக்கள்..............

ஒரு சமூகத்தில் தூக்கில் தொங்கி மரணிப்பவர்கள் பற்றிய செய்தியினை பிரசுரிப்பது சரியானதா? தவறானதா? உண்மையில் சந்தேகத்திற்கு இடமாக அடித்தோ அல்லது பிறராலோ துன்புறுத்தப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தால் அதனை வெளியீடு செய்வது பொருத்தமாகவிருக்கலாம், ஏனெனில் இவ்வாறான விடயத்தினை வெளியில் கொண்டுவருகின்ற போது, சந்தேகநபரை தப்பிக்கவிடாமல், தண்டணையை பெற்றுக்கொடுப்பதற்கான வழியாக அமையலாம். வித்தியாவின் கொலைகூட ஊடகங்களில் பரவலாக்கப்பட்டமைதான் நீதிபெற்றுக்கொள்வதற்கு காரணமாகவிருந்தது என்பதனை மறுப்பதற்கில்லை.

ஆனாலும், ஏதோ ஒரு காரணத்தினால் தானாகவே தூக்கில் தொங்கி மரணிக்கின்றவர்கள் பற்றிய செய்தினை வெளியீடு செய்கின்ற போது ஊடகத்தினால் கிடைக்க கூடிய நன்மை என்ன? மரணித்தார் என்ற செய்தி மற்றவர்களுக்கு சென்றடையும். அதனை தூக்கில் தொங்கிதான் மரணித்தார் என்றுகூறி செய்தினை கொண்டு செல்ல வேண்டுமா? அகாலமரணமடைந்தார் என்று கூறி அச்செய்தியினை கொண்டு செல்ல முடியாதா? இவ்வாறு மரணித்தவர் பெயரினை குறிப்பிடுவதால், மரணித்தவருக்கு எவ்விதத்திலும் பிரச்சினைகள் இல்லை. ஆனால், அவ்வாறு மரணித்தார் என்ற செய்தியினை பிரசுரித்தவுடன், சமூகத்தினர் பார்க்கின்ற விதம் வித்தியாசமாகவே இருக்கும். இந்நிலை அவர்களின் குடும்ப உறுப்பினர்களை உளரீதியாக பாதிக்ககூடும். அப்பாதிப்பு ஒருநாளில் நீங்கிவிடப்போவதும் இல்லை.

இதைவிடவும், மரணித்தவரின் பெயரை மாத்திரம் கூறாமல், அவரது வீடு அமைந்துள்ள இடம், கற்ற பாடசாலை, கிராமம் என பலவற்றையும் வெளியில் கொண்டு வந்துதான் செய்திகளாக்கி வெளியிடுகின்றனர். இது சரியா? தவறா?. இத்தோடு நிறைவுறுத்துவதுமில்லை, அதற்கு அப்பால் சென்றும், எங்கு, எப்போ, எவ்வாறு, என்னத்தில், எவ்வளவு உயரத்தில், எதைக் கொண்டு தூங்கினார் என பலவிடயங்களை உள்ளடக்கி செய்தி ஆக்குகின்றபோது, இன்னொருவர் தற்கொலை செய்வதற்கான வழியினை சொல்லிக்கொடுத்து ஊக்கிவிப்பது போன்று அச்செயற்பாடு அமையாதா? ஆனாலும் இவை குறித்தான வினாக்கள் தொடுக்கப்படுகின்றதோ? இல்லையோ? செய்திகள் வெளிவருகின்றன.

இத்தோடு நிறுத்தி விடுவதும் இல்லை, திடீர் மரண விசாரணை அதிகாரி உரிய தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வாக்கு மூலத்தினையும், பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல் பிரசுரிக்கப்படுவதுமுண்டு. இது எவ்வகையில் நியாயமானது? அதற்கு அப்பாலும், தூக்கில் தொங்கிய இடத்திற்கு சென்று படத்தினை அல்லது வீடியோவினை எடுத்து அவ்வாறே பிரசுரிக்கின்ற நிலையும் உள்ளது. இது, பொருத்தமானதா? அவ்வாறு பிரசுரிப்பது மற்றவரை அவ்வாறான செயலுக்கு தூண்டுகின்றதாக அமையாதா? அல்லது மற்றவர்களை உளரீதியாக பாதிக்காதா? இவ்வாறான பல வினாக்கள் தூக்கில் தொங்கும் நபர்களை செய்தியாக பிரசுரிக்கின்றபோது எழுகின்றது.

எனவே, பிரசுரிப்பது தவறா? இல்லையா? என இங்கு கருத்தினை பதிவு செய்யாவிட்டாலும், ஒவ்வொரு ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களும், செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களும், சமூகவலைத்தளத்திலே பதிவிடுகின்றவர்களும் சற்று ஒருகணம் சிந்தியுங்கள்............




SHARE

Author: verified_user

0 Comments: