12 Nov 2019

தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் சஜித் வெற்றி பெறுவார் -மட்டக்களப்பில் சுமந்திரன்.

SHARE
தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் சஜித் வெற்றி பெறுவார் -மட்டக்களப்பில் சுமந்திரன்.
தமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெல்லுவார் என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற சஜித்துக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்திலே அவர் இவ்வாறு தேரிவித்தார் . அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. இந்த தேர்தலிலே 35 பேர் போட்டியிடுகிறார்கள். 33 பேர் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இருவரிலே ஒருவர்தான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த இருவரிலே ஒருவர் எப்படியாவது வெற்றி பெறுவார். தமிழ் மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அந்த இருவரில் ஒருவர் வெற்றிபெறத்தான் போகிறார். தமிழ் மக்கள் மற்றய 33 பேரில் ஒருவருக்காவது வாக்களித்தாலும் அல்லது சோம்பேறித்தனமாக வீட்டிலே இருந்தாலும். இந்த இரண்டு பேரிலே ஒருவர் வெற்றிபெறத்தான் போகிறார். ஆனால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற கருத்தக் கணிப்பின்படி தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாவிட்டால். கோட்டாபய ராஜபக்ச இலகுவில் வெற்றிபெறுவார். என்பது எல்லாருடைய கணிப்பு. தமிழ் மக்கள் திரளாக வாக்களிப்பார்களாக இருந்தால். சஜித் பிரேமதாச வெல்லுவார் என்றும் அந்தக் கணிப்புகள் சொல்லுகின்றன.

மீண்டுமொருமுறையாக எங்களுடைய கையிலே இந்த நாட்டினுடைய தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் கேட்கக்கூடும் தீர்மானித்த பிறகு எங்களுக்கு எதுவும் நடப்பதில்லை. என்று நியாயமானதொரு கருத்தைச் சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு மற்றவர்களுடைய கையில் அந்த தீர்மானத்தை விடுவோமாக இருந்தால் எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறானவர் தெரிவு செய்யப்பட்டால் நாங்கள் எங்கே இருப்போம் எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை நாங்கள் நீண்டதூரம் கற்பனை செய்துபார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் அந்த தவறானவர் ஏற்கனவே அட்சி அதிகாரங்களை உபயோகித்து காண்பித்திருக்கிறவர். இலங்கைப் பிரஜா உரிமையை இரட்டைப் பிரஜா உரிமையை தான் பெற்றதாகக் கூறுகின்றார். அதற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்று குற்றப்புலனாய்வுத்துறை நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றது. அந்த வழக்கு இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றது. மேன்முறையீட்டு நீதி மன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வேறொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் அந்த தீர்ப்பிலே இந்த குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அ+னாலும் போலியான ஆவணங்களைக் காண்பித்து தான் இரட்டைப்பிரஜா உரிமையையும் எடுத்திருக்கின்றேன் என்று காண்பித்திருக்கிறார்.
அது சரிபோகட்டும் என்று பார்த்தால். தேர்தலிலே போட்டியிடுவதற்கு இரட்டைப் பிரஜையாக இருக்க முடியாது அமெரிக்க பிரஜா உரிமையை துறக்க வேண்டும். அதையும் துறந்து விட்டேன் என்று ஒரு ஆவணத்தைக் காட்டுகின்றார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்திருக்கிறது. மூன்றாவது காலாண்டுக்கான பட்டியல். அமெரிக்காவிலே அவர்களுடைய பிரஜா உரிமையை இழக்கிறவர்களுடைய பெயர்ப்பட்டியல். ஒவ்வொரு மூன்று மாதமும் வெளியிடப்படும். இந்தவருடத்திற்கான மூன்றாவது காலாண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதிலும் அவருடைய பெயரில்லை. இந்த வருடம் ஏப்பிரல் மாதத்திலேதான் அந்த விண்ணப்பத்தை அவர் செய்ததாகச் சொல்லுகின்றார். மூன்று காலாண்டிதல் பட்டியலிலும் அவருடைய பெயர் கிடையாது.
அப்படியாக தன்னுடைய பிரஜா உரிமை சம்மந்தமாகக் கூட முற்று முழுதான பொய்களை உரைத்துக் கொண்டு. இந்தநாட்டின் ஜனாதிபதியாக அவர் வர எத்தனிக்கின்றார். என்னவெல்லாம் நடந்தது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். போரை தான்தான் முன்னின்று நடத்தியதாக மார்தட்டுகிறார். அவர்தான் தீர்மானங்களை எடுத்தவர். அதற்காக ஒரு புத்தகமே எழுதி வைத்திருக்கிறார்.

ஆனால் அண்மையில் த இந்து பத்திரிகை சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று ஒரு கேள்வியைக் கேட்டபொழுது. அதற்கு அவர் போih நான் நடத்தவில்லை. இராணுவத் தளபதிதான் நடத்தினார் என்று அவர்மீது பழியைப் போட்டுவிட்டார். போர் எப்படியாக நடத்தப்பட்டது. என்னவிதமாக மக்களெல்லாம் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதற்கு பிறகும் கூட என்னவிதமான ஒரு அடக்குமுறை ஆட்சியை அவர் நேரடியாகவே செய்தார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் தன்னுடைய சுபாவத்தை மாற்றி விட்டார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. அவருக்கு சடுதியாக கோவம் வந்துவிடும். சடுதியாகக் கோவம் வந்து விட்டால் என்ன செய்வதென்று தெரியாது. அதுதான் ஒருவர் நேற்றுமுன்தினம் சொல்லியிருக்கிறார். இந்த வெள்ளைவான்களை வைத்துதான் அ+ட்களைக் கடத்தினோம். எனக்குத் தெரிய 300 பேரை முதலைகளுக்கு இரையாகக் கொடுத்திருக்கிறோம் என்பதை ஒருவர் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். அப்படியானவர். ஜனாதிபதியாவது நடக்கக்கூடிய காரியமாக இன்று இருக்கிறது. சாத்தியக்கூறு மட்டுமல்ல தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டால் அவருக்கு வாக்களித்தால் வேறு 33 பேருக்கு வாக்களித்தாலும். அவர்தான் ஜனாதிபதியாக வருவாரென்பது தெளிவாகத் தெரிகின்றது.
இந்த சூழ்நிலையிலேயே எங்களுடைய கையிலே தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதன் அர்த்தம் என்ன? எங்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம் இந்த நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளலாம். அதேவேளை வெல்லுவதற்குறிய சாத்தியக்கூறுள்ள மற்றவருக்கு வாக்களித்தால். எங்களையும் நாட்டையும் காத்துக் கொள்ளளலாம். மற்றவர் யார். அவரும் பலகாலம் அரசியலில் இருந்துள்ளார். மக்களைக்கடத்தினார் என்று அவருக்கு எதிரான குற்றச்சாட்டு இல்லை. அடக்கு முறையைக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இல்லை. கோவப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இல்லை. மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தாhர் என்ற ஒரு குற்றச்சாட்டுதான் இருக்கின்றது.

இனிமேல் எப்படியாக இருப்போம் என்று தேர்தல் அறிக்கைகளை கொடுத்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவோடு நான் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியவன். என்னிடத்திலே சொன்னார். அரசியல் தீர்வைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அதை அண்ணனோடு கதைச்சுக் கொள்ளுங்கோ எண்டு. பிறகு அண்ணன் என்னை கூப்பிட்டுச் சொன்னார். அவருடன் பேசச்சொல்லி. அவருடனும் பேசினேன். அவர் ஊர்ல நடக்கிற எல்லா சங்கதிகளைப்பற்றியும் பேசினார் அரசியல் தீர்வைப்பற்றி பேசல்ல. இப்ப தேர்தல் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்

கோட்டாபய ராஜபக்ஷ. அரசியல் தீர்வைப் பற்றி எதவுமே கிடையாது. அப்படியொரு தமிழ்தேசியப் பிரச்சனையொன்று இந்த நாட்டிலே இருப்பதாகக் கூட இல்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் அப்படியொரு பிரச்சனையே இல்லை. மாறாக. சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் அறிக்கையை நீங்கள் படித்துப் பார்த்திருப்பீர்கள். அதிலே இந்தப் பல்லினத்துவ நாட்டு மக்களைக் கொண்டாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்.அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள். ஒரு நாட்டுக்குள்ளே அதியுச்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படும். அதற்கான அரசியலமைப்பு நடவடிக்கைகள் இடைநடவிலே நிறுத்தப்பட்டிருப்பது. முழுமையாக்கப்படும். நிறைவேற்றப்படும். இன்னும் பல விடயங்கள். நாங்கள் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தினபோது பேசிய அனைத்து விடயங்களும். அதிலே இருக்கின்றன. அதிலே இருக்கின்ற காரணத்தினாலே அதையெல்லாம் அவர் செய்துவிடுவார் என்று உங்களுக்கு நான் சொல்ல வரவில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் செய்யக்கூடிய துணிவாவது அவருக்கு இருந்திருக்கிறது. மற்றவருக்கு இதையும் சொல்லுவதற்கான மனமே இருக்கவில்லை. சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் அதற்கு பிறகு என்னவிதமாக இந்த விடயங்களை நாங்கள் முன்னோக்கி நகர்த்தவேண்டும் என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும். நாங்கள்தான் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி இந்த விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எங்களிடத்திலேதான் தமிழ் மக்கள் அந்த ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். வேறு பலரெல்லாம் இருக்கிறார்கள் பகிஸ்கரிக்கச் சொல்லுகிறார்கள். இவருக்கு வாக்களியுங்கள், அவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுவரைக்கும். தமிழ் மக்களுடைய அரசியல் தீர்மானங்களை செய்வதெற்கென்று தமிழ்மக்கள் பொறுப்பைக் கொடுத்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும்தான். அந்தப் பொறுப்பை நாங்கள்தான் நிறைவேற்றவேண்டும். ஆனபடியினால்தாhன் தமிழ்மக்கள் சார்பிலே நாங்கள் பேசினோம். அவருடைய வாக்குறுதிகளைப் பெற்றிருக்கின்றோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பண்ணுகின்ற தொழிலையும். அந்தப் பொறுப்பையும். நாங்கள்தான் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.

அதைத்தொடர்ந்து செய்வோம். பல இழுத்தடிப்புக்கள் இருந்திருக்கின்றன கடந்த காலங்களிலே கடந்த நான்கரை வருடங்களிலே..உண்மை இழுத்தடிப்புக்கள் இருந்தன என்பதற்காக எதுவும் நடக்கவில்லை யென்று எவரும் சொல்லக் கூடாது. சொல்ல முடியாது. நிறையவே நடந்திருக்கின்றது. உடனடிப்பிரச்சனைகள் சம்பந்தமாக 217 அரசியல் கைதிகள் இருந்த இடத்திலே 70 பேர்தான் இருக்கிறார்கள். அதுவும் முதல் ஒரு வருடத்திலேயே அதை நாங்கள் செய்திருந்தோம். எத்தனையோ ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. காணாமல் போனோர் சம்பந்தமாக அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த சட்டம் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டபொழுது. கோட்டாபய ராஜபக்ஷவினுடைய கட்சியினர் அதைக் குழப்புவதற்காக பாராளுமன்றத்தின் நடுவிலே நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மூன்றே மூன்றுபேர் பேசினோம். அது நிறைவேற்றப்பட்டது. அதுவும் சரியாக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை ஆனால். நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த விசாரணைகள் உடனடியாக ஆரம்பமாக்கப்படவேண்டும். இந்த வாக்குறுதி சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே சொல்லப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு சம்மந்தமாக பாராளுமன்றமே அரசியல் சபையாக மாற்றப்பட்டு பல அறிக்கைகள் கொடுக்கப்பட்டு இறுதியிலே இந்த வருடம் ஜனவரிமாதம் 16 ஆம் திகதி ஒரு மாதிரி வரைபும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. நெடும்தூரம் வந்திருக்கின்றோம். இதெல்லாம் திடீரென்று உருவானவைகள் அல்ல. இன்னும் முடிவை எய்தவில்லை. அது உண்மை. ஆனால். இவ்வளவுதூரம் வந்ததென்பதும் உண்மை. இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. அதை சஜித் பிரேமதாச தலைமையிலே இதுவரை செய்த ஒன்றையும் விரயமாக்காமல் செய்து முடிப்பதற்கான ஒரு அவகாசத்தை நாங்கள் கேட்கிறோம். அதனாலே அவருக்கு வாக்களிக்கும்படி சொல்லுகின்றோம். ஒரு கொடூரன் இந்த பதவிக்கு வரக்கூடாது அதைத் தடுக்க வேண்டும். மற்றவரோடு நாங்கள் முன்னே பயணம் செய்வதற்கு இடமிருக்கின்றது. அதற்கான சந்தர்ப்பத்தையும் நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவுதான். இலகுவான தெரிவு. இந்த தேர்தலிலே தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலே வேறு தேர்வொன்றும் இருந்திருக்க முடியாது. ஆகவே எங்களுடைய தெரிவு தேர்தலிலே முடிவாக வரவேண்டுமாக இருந்தால். தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதாவது தமிழ் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மக்களைவாக்களிக்கப் பண்ணவேண்டும். எங்களுடைய தீர்மானத்திலே உறுதியாக நிற்க வேண்டும்.

வாக்களிக்கப்படவிருக்கின்ற ஒவ்வொருவரும் சென்று அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். மக்களைத்திசை திருப்புவதற்காக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரேயொரு புள்ளடிமட்டும் போடுங்கள். வாக்குச் சீட்டை இரண்டாக மடித்து நடுவிலே பாருங்கள். நடுப்பகுதியிலே அன்னச்சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை போடுங்கள். இந்த இலகுவான அறிவுரையை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இறுதி நேரத்திலே நாங்கள் செய்கின்ற இந்த பரப்புரையிலே மக்கள் அதிகமாக வாக்களிக்கப்படவேண்டும். வாக்களிக்கின்ற அனைவரும் அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதைச் செய்தால்தான் நாங்கள் திரும்பவும் ஒரு முறையாக அந்தக் கொடுங்கோல் ஆட்சியை தடுத்து நிறுத்தபவர்களாக நாங்கள் இருப்போம். என்று தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: