6 Oct 2019

வித்தகர் விருது பெற்ற கந்தசாமி.

SHARE
வித்தகர் விருது பெற்ற கந்தசாமி.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கிராமத்தினைச் சேர்ந்த நல்லையா கந்தசாமி கிழக்கு மாகாண வித்தகர் விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

40 வருடகாலமாக கலை இலக்கியதுறைக்கு ஆற்றியசேவையைப் பாராட்டி “நாடகம் மற்றும் ஓவியம்” ஆகியதுறைகளில் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க பங்களிப்புக்காக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குமாகாண கல்வி, தொழில்நுட்பக் கல்வி முன்பள்ளிக்கல்வி விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அண்மையில், மட்டக்களப்பில் நடாத்திய 2019ம் ஆண்டிற்கான தமிழ் இலக்கியவிழாவின் போதே இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரான எதிர்மனசிங்கம் இவருக்கான பொன்னாடையை போர்த்தி மாலை அணிவித்து பொற்கிளி மற்றும் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.  

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற உயர்விருதான வித்தகர் விருதினைப்பெற்ற நல்லையா கந்தசாமி, 1944ம் ஆண்டு கார்;த்திகை மாதம் 12ம் திகதி பிறந்தார். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமீன்மடு முகத்துவாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது ஆரையம்பதியில் வசித்து வருகின்றார்.

இவர், தனது ஆரம்பக்கல்வியை மட்.அரசினர்; பாடசாலையில் கல்விகற்று, 1961ம் ஆண்டுமுதல் நாடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டு 10 நாடகங்களுக்கு மேல் நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளார். “பாவை என் நெஞ்சில்” எனும் நாடகம் இவரின் திறமையை வெளிக்காட்டிய நாடகமாகும். பாலமீன்மடு விநாயகர் பிலிம்சாரின் “அந்த இரவு உறவுசொன்னது” எனும் முதலாவது வீடியோப் படத்திலும் நடித்துள்ளார். பல்வேறு மன்றங்கள் கலைக்கழகங்களில் அங்கத்தவராகவும் ஸ்தாபகராகவும் இருந்துள்ளார். இவரைப் பாராட்டி பல கழகங்கள் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்துள்ளன. நாடகத்துறை மட்டுமின்றி, கதையாசிரியராகவும் ஓவியராகவும் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.

இவரால், வாழ்வழிந்தவன் - 1962, நெஞ்சில் நிறைந்தவன் - 1963, பாவைஎன் நெஞ்சில் - 1964, குழந்தையா குற்றவாளியா -1965இ வழுக்கி விழுந்தமாப்பிள்ளை– 1968, நல்லமனம் வாழ்க– 1989, மாறியதுநெஞ்சம் - 1990, அந்த இரவு உறவு சொன்னது– 1983 போன்ற நாடகங்களும் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன.   

1968ம் பாடசாலைக்கல்வியை நிறைவு செய்த இவர், வாழைச்சேனை காகிதஆலைத்தொழிற்சாலையில் பிரதம எழுதுனராக கடமையாற்றி, 2002ம் ஆண்டின் பின்னர், ஓய்வுபெற்றநாள் முதல் கலை இலக்கிய வாழ்வில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இவர், பல்வேறுபட்டங்களையும் பாராட்டுக்களையும் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் “கலாபூ~ண விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: