16 Oct 2019

கஞ்சி குடிப்பதற்கும் அஞ்சவேண்டியுள்ளது நாட்டு மக்களிடையே பீதி அகலவில்லை. தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன.

SHARE
கஞ்சி குடிப்பதற்கும் அஞ்சவேண்டியுள்ளது நாட்டு மக்களிடையே பீதி அகலவில்லை. தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன.
நாட்டில் தொடர்ந்தும் நீடிக்கும் இனவாத மதவாத தீவிரவாத செயற்பாடுகளினால் மக்களிடையே பீதி, சந்தேகம், அச்ச உணர்வு ஆட்கொண்டுள்ளது. இது கஞ்சி குடிப்பதற்கும் அஞ்ச வேண்டிய சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதாக  தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு  வரும் “நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சமூக வன்முறைகளின் தாக்கமும் அத்தாக்கங்களிலிருந்து விடுபட்டு இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதலும்” எனும் கருத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் செவ்வாய்க்கிழமை 15.10.2019 மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸார், அரசாங்க அலுவலர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து அனுபவப் பகிர்வையும் செயற் திட்டத்தையும் பற்றி விளக்கமளித்த ரஷிகா செனவிரட்ன

இலங்கை தேசிய சமாதானப் பேரவை இனமுறுகலையும் அமைதியின்மையையும் தணிப்பதற்காகவும் நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்காகவும் இலங்கை முழுவதும் உருவாக்கப்பட்ட மாவட்ட சர்வமத செயற்பாட்டுக் குழுக்கள் ஊடாக பரந்துபட்ட பணிகளைச் செய்து வருகின்றது.

அந்த வகையில் இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையும் தன்னாலான பங்களிப்பை ஆற்றமுடியும் என இலங்கை தேசிய சமாதானப் பேரவை எதிர்பார்க்கின்றது.

ஏப்ரில் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டு மக்களிடையே ஒருவர் மீது ஒருவர் அச்சமும் சந்தேகமும் கொள்ளவேண்டியேற்பட்டதோடு இன்னொரு சாரார் அவமானப்படவும் நேர்ந்தது.

இந்த நிலைமை இப்பொழுது கூட முழுமையாக மாறிவிட்டது என்று நிம்மதி கொள்வதற்கில்லை.

நாட்டு மக்களிடையே இனவாத, மதவாத தீவிரவாத செயற்பாடுகளினால் உண்டான மனக்காயங்கள் (வுசயரஅய) இன்னமும் வலிகளாக உள்ளன.
இவற்றை ஆய்ந்துணர்ந்து குணப்படுத்தாவிட்டால் நிலைமை வர வர மோசமடையும். தமது பணியிடங்களில் இன மத பேதம் பாராது ஒரு பார்சல் உணவை பரஸ்பரம் பகிர்ந்துண்டு மகிழ்ந்த உயிரோட்டமான நட்புறவைக் கூட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சீர்குலைத்து சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

காலாகாலமாக புனித றமழான் நோன்புக் காலத்தில் பகிர்ந்து குடித்த கஞ்சியைக் குடிக்க வைக்காமல் ஐயப்பாட்டையும் அச்சத்தையும் தோற்றுவித்து விட்டது இந்த தீவிரவாத தாக்குதல்கள்.

எனவே, உண்மையில் மதவாதத்தால், இனவாதத்தால், தீவிரவாதத்தால் பேசுவதை விட நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்குள் ஒன்றுபட்டு இதயக் கதவைத் திறந்து மனங்களால் பேச வேண்டும்.

அதுதான் இந்த நாட்டின் விமோசனத்துக்கு வழிவகுக்குமேயன்றி மதவாதமும் இனவாதமும் தீவிரவாதமும் இந்த நாட்டை அடியோடு அழிக்கும் என்பதை அனைவரும் நின்று நிதானித்து உற்றுக் கவனித்துக் கொண்டு செயற்பட வேண்டும்” என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: