18 Sept 2019

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை!

SHARE
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை!
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 18029 ஏக்கரில் 2019ஃ2020 பெரும்போக விவசாய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக்கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் தலைமையில் (17) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் போது, விவசாய வேலைகள், விதைப்பு, அறுவடை போன்றவற்றிற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டதுடன், உழவு இயந்திரம், அறுவடை கூலிகள் தொடர்பிலும் கூறப்பட்டன. மேலும் கால்நடைகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வெட்டிப்போட்டசேனை, கறுவாச்சோலை, புளுகுணாவை மணல் ஏத்தம், காத்தமல்லியார்சேனை, பெருவெட்டை போன்ற மேய்ச்சல் தரைப்பகுதிகளுக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கான விவசாயக்கடன்கள், காப்புறுதி, உரமானியம் தொடர்பிலும் தெளிவுறுத்தப்பட்டது. மேலும் வைக்கோல்களை எரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

நீரினை வீண்விரயமாக்குதல், தீர்மானத்திற்கு மேலதிகமாக விவசாய செய்கையில் ஈடுபடுதல் தொடர்பில் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது விவசாயிகளுக்கும், விவசாய அமைப்புக்களுக்கும் கூறப்பட்டது.
இவ் ஆரம்பகூட்டத்தில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மாவட்ட விவசாய சார் உயரதிகாரிகளும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: