13 May 2019

அரசியல் தலைவர்கள் பிரித்தாளுகின்ற தந்திரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களை மோத விடுகின்றனர். மூளைச் சலவை செய்யப்பட்டவர்களை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்கவில்லை - மட்டக்களப்பு எம்பி. சிறிநேசன் ஆதங்கம்

SHARE
அரசியல் தலைவர்கள் பிரித்தாளுகின்ற தந்திரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களை மோத விடுகின்றனர். மூளைச் சலவை செய்யப்பட்டவர்களை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்கவில்லை - மட்டக்களப்பு எம்பி. சிறிநேசன் ஆதங்கம்.
அரசியல் தலைவர்கள் அதிகார போதையில் பிரித்தாளுகின்ற தந்திரத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை மோதவிட்டு தாங்கள் சுகமாக ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு நாம் எப்போதும் வழிவகை செய்யக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - சித்தாண்டி வில்லுக்குளம் கிராம வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை (11.05.2019) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனை கொண்டு செயற்படுகின்றார்களே தவிர ஆட்சியைப் பிடித்த பின்பு நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது மக்களின் மத்தியில் எவ்வாறு ஒற்றுமையை எற்படுத்துவது இனவாதம், மொழிவாதம், பிரதேச வாதம் இல்லாமல் எவ்வாறு இந்த நாட்டினை வளர்த்துச் செல்வது போன்ற சிந்தனைகள் இல்லாமலேயே காலங்கழித்து விடுகின்றனர்.

ஏப்பிரல் 21 குண்டுவெடிப்புகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஒருவர் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை அடக்குவதாக இருந்தால் நான் ஜனாதிபதியாக வரவேண்டும் என பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். 
இவரது செயல்களுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்புள்ளது என சிந்திக்க வேண்டும்.

இனங்களை, மதங்களை, மொழியினரைப் பிரித்தாளுகின்ற தந்திரத்தினைப் பயன்படுத்தி எமது மக்களை ஒற்றுமையாக வாழ முடியாமல் தடுக்கின்ற அரசியல் வியாபாரம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதன் ஒரு கட்டமாக தற்கொலைத் தாக்குதல் அமைந்திருக்கலாம்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலுள்ள 26 பேருக்கு கடந்த கால ஆட்சியின்போது புலனாய்வுப் பிரிவினரால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித கூறியள்ளார். 

இவர்களை ஆரம்பித்தில் அடக்கியிருந்தால் தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றிருக்காது.

இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமாகவிருந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தொடர்ந்தும் பிரச்சினைகளை சேகரித்துக் கொண்டிருக்கும் வைப்பகங்களாக இந்த நாடு இருக்க கூடாது.

இலங்கையின் சுதந்திரத்திற்காக சிங்களவர், தமிழர் முஸ்லிம்கள் ஆகியோர் இணைந்தே போராடினார்கள்.

இலங்கை தேசிய காங்கிரஸின் தலைவராக சேர் பொன் அருணாசலம் தெரிவுசெய்யப்பட்டார். அப்போது இன மொழி மத பேதங்கள் இருக்க வில்லை.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிப் பீடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாதம் மத வாதம் கட்டியெழுப்பப்பட்டது.

இலங்கையில் சமத்துவமான சோஷலிச அரசை உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

அது தோல்வியில் முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டும் தமிழீழத்தை அமைக்க வேண்டும் என்று போராடினார்கள்.

ஆனால் தற்போது இடம்பெறும் போராட்டம்  என்னவென யாருக்கும் புரியவில்லை. அவர்கள் கூறும் கருத்துக்கள் இஸ்லாமிய மதத்தில் இல்லை. சம்மாந்துறையில் நடைபெறவிருந்த ஆபத்தினை இஸ்லாமிய மக்களே காட்டிக் கொடுத்து தடுத்துள்ளார்கள். இது மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு சிரு குழுவினர் செய்யும் செயலாகவே பார்க்க வேண்டும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: