6 May 2019

வதந்திகளை பரப்பி நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் - மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்.

SHARE
மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்தும், வன்மக் கருத்துக்களை வெளியிடாமல் முறையாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மாவட்டத்தில் உள்ள நல்லிணக்கக்குழுவிற்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை(6) காலை 10.00 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.தலைமையில்  நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் இஸ்லாமிய, இந்து, கத்தோலிக்க மதத்தலைவர்கள், குருமார்கள் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் பின்னர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியராளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… இன்று நாட்டிலே ஏற்பட்ட அனர்த்தத்தினால் இனக்களுக்கிடையில், மதங்களுக்கிடையில், இன நல்லிணக்கம் உடைந்துபோய் வன்மக் கருத்துக்கள் அதிகரித்துள்ளன. எனவே அனைவரும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிக்க வேண்டும். மத வழிப்பாட்டுத் தலங்களை இன, மத, மொழி கடந்து சிறப்பாக கட்டியெழுப்ப வேண்டும். இதன்போது கிராம மட்டத்தில் அதிகளவான இளைஞர்களை ஒன்றிணைத்து விழிப்புக்குழுக்களை அமைத்து மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக அனைவரும் பகிரங்கப்படுத்தக்கூடிய வெளிப்படையான, கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்தி ஐக்கியத்துடன் சமாதானமாகவும், விட்டுக்கொடுப்புடனும்  நடந்துகொள்ள வேண்டும். அன்பான வார்த்தைகளை மனிதர்களிடம் பிரயோகித்து உறவுகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர் சமூகத்தினர் வன்மக் கருத்துக்களை தவிக்க வேண்டும்.

சமூகத்தில் உள்ள அடிமட்ட மக்களுக்கு நல்லிணக்கம் தொடர்பாக விழிப்பூட்டப்பட வேண்டும். பிரதேச செயலாளர், கிராமசேவகர் மற்றும் கிராமமட்ட அமைப்புக்களினூடாக இதனை காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களுக்கும், பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். இக்குழுக்கள் ஊடாக அதிகளவான இளைஞர் கழங்களை இணைத்துக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம் கடைகளை மட்டுமன்றி எல்லா வியாபார நிலையங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பிரதேச, கிராம மட்டங்களிலுள்ள அமைப்புக்களை அடிப்படையாக கொண்டு மத வழிபாட்டுத் தலங்களினூடாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். முறையான அதிகாரம் ஏதுமின்றி தங்கியிருக்கின்ற வெளிநாட்டவர்களை கண்காணித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இக்கண்காணிப்பு நடவடிக்கைகளில் பிரதேச மற்றும் கிராமிய நல்லிணக்க குழுக்கள் ஈடுபட வேண்டும். குறிப்பாக வதந்திகளை பரப்பி நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாமென அவர் இதன்போது தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: