25 Apr 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (24) ஆற்றிய உரை.

SHARE
இந்த நேரத்தில் ஒரு சில வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு கனமான இதயத்துடன் நான் எழுகிறேன். முதலில், ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் ஜெபிக்கிறோம்.
நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன், இந்த சமயத்தில் இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயத்தின் துன்பத்தில் நான் பங்கு கொள்கிறேன். இந்த உலகத்திற்கு வந்து எம்மைப்போலவே பாடுகளை அனுபவித்து தீமையின் கொடுமை முழுவதையும் தன்மேல் எடுத்துக்கொண்டு, அநீதியான முறையில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கிறோம். அவர் சகல தீமையையும் தன்னையே தியாகம் செய்யும் அன்பினால் முறியடித்தார். இதனையே நாம் அவரது உயிர்பின் நாளாகிய ஈஸ்டர் தினத்தன்று கொண்டாடுகின்றோம். நாம் துக்கமடைந்திருகின்றோம் - ஆயினும் வெறுப்பும் பழிவாங்குதலும் எம்மை மேற்கொள்ள நாம் இடமளியோம். குண்டுவெடிப்பு இடம்பெற்ற தருணத்தில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த அருட் தந்தை ஜூட் பெர்னாண்டோவின் வரிகளையே நானும் கூற விழைகிறேன்:

“நாம் சமாதானத்தை நேசிக்கிறோம். நாம் மன்னிக்கின்றோம். நமது கடவுள் பழிவாங்குதலின் கடவுள் அல்ல, அவர் சமாதானத்தின் கடவுள். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம், மன்னிக்கின்றோம்”

இந்த படுகொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டனையேதும் இன்றி தப்பி போகாலம் என்பது இதன் பொருளாகாது. மாறாக வெறுப்பின் செய்கையை புரிந்த குற்றவாளிகளுக்கு எதிராக நாமும் வெறுப்போடு செயற்பட மாட்டோம் என்பதே இதன் பொருளாகும். பழிவாங்குதலை நோக்காக கொண்டிராமல் உண்மை, பொறுப்புப் கூறல் மற்றும் நீதியை நோக்காக கொண்டு செயற்படல் வேண்டும். குற்றவாளிகளை முழு முயற்சியோடு பின்தொடர்ந்து பிடித்து சட்டத்துக்கு அமைவாக நீதியின் முன்னிறுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். 

தகவல் கிடைத்திருந்தும் ஏன் தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்கின்ற மிகமுக்கியமான கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் உயர் பதவியில் இருப்பவர்கள் முதலாக ஆகக் குறைந்தது தம் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும். காவல்துறையை ஜனாதிபதி தன் பொறுப்பின்கீழ் வைத்திருப்பது தொடர்பில் பட்ஜெட் விவாதத்தின் போது நான் கேள்வி எழுப்பினேன். இது தெளிவாக அரசியலமைப்புக்கு முரணானது. 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, சட்டம் மற்றும் ஒழுங்கு என்று அழைக்கப்படும் தனி அமைச்சின் கீழ் காவல்துறை அடக்கபட்டது. ஜனாதிபதி தன் கீழ்கொண்டிருக்க கூடிய 3 விடயங்களை அரசியலமைப்பு அடையாளப்படுத்தி காட்டுகின்றது. அவையாவன, பாதுகாப்பு, மகாவலி மற்றும் சூழல் என்பனவாகும். சட்டம் மற்றும் ஒழுங்கு அதில் இல்லை. இந்த அமைச்சை சட்டவிரோதமாக தான் வைத்திருப்பதன் மூலம் தடுத்து நிறுத்தியிருக்க கூடிய இத்தாக்குதல்களுக்கு  இப்போது ஜனாதிபதி தானே பொறுப்பை ஏற்கவேண்டிய முதல் நபராகிவிட்டார்.

திங்கட்கிழமை மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட சிலரின் இறுதிச் சடங்கில் நான் கலந்துகொண்டேன். வடக்கு மற்றும் கிழக்கில் இன்றைய தினம் துக்க நாளாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் - ஹர்த்தால் அல்ல - துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என எமது கட்சி அழைப்பு விடுத்தது. மட்டக்களப்பு கத்தோலிக்க பிஷப் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரை நான் சந்தித்து இதனை அறிவித்திருந்தேன். துரதிருஷ்டவசமாக, ஆளுநர் இந்நாளை ஹர்த்தால் என்று அறிவித்துவிட்டார். ஹர்த்தால் அல்ல என்பதை மிகவும் தெளிவாக நான் கூறியிருந்தும் அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டார். ஆளுநருக்கும் தேசிய தௌஹீத் ஜமாத் இற்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. இது விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறே, இந்த குழுவானது பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் முந்தய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லீம் மக்கள் இந்த முறைகேடுகள் பற்றி மீண்டும் மீண்டும் நாம் மெச்சக்கூடியவாறு புகார் அளித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்னர், முஸ்லீம் குழுக்கள் இந்த குழப்பவாதிகள் பற்றி பிரச்சினை எழுப்பி, உளவுத்துறை அதிகாரிகளிடம் இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், 2017 ஆம் ஆண்டில் அவர்கள் காத்தான்குடியில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி ஜஹரன் கைதுசெய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த வகையில், நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக நடந்து கொண்ட  கௌரவ.கபீர் ஹாஷிமின் தைரியமான நடத்தையை நான் பாராட்டுகிறேன்.

இறுதியாக, நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறேன் - குறிப்பாக அரசியல்வாதிகள் - இத் துயருக்காக எந்த ஒரு சமுதாயத்தையும்  குற்றம்சாட்ட வேண்டாம். இந்த நாட்டிலுள்ள முஸ்லீம்கள் வன்முறைகளால் திணிக்கப்பட்ட போதிலும் தாங்கள் வன்முறையில் ஒருபோதும் ஈடுபடவில்லை. அதை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். சிங்கள, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்கள் எல்லோருமாக கைகோர்த்து எங்களனைவருக்குமான நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: