17 Feb 2019

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் எஸ். சிவயோகநாதன்.

SHARE
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் எஸ். சிவயோகநாதன்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதுவித கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்படவும் முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பான இணையத்தின் தலைவர் எஸ். சிவயோகநாதன் தெரிவித்தார்.

இது விடயமாகத் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும்  கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை 17.02.2019 மேலும் தெரிவித்த அவர்,

ஏற்கெனவே எமது நாட்டில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான 15 இற்கு மேற்பட்ட சட்டங்கள் அமுலில் உள்ளன.

ஆனால் அவற்றை சரியாக அமுல்படுத்தி நாட்டில் இடம்பெறும் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் தடுத்திருக்க வேண்டிய அரசாங்கம் அதில் பொடுபோக்காக இருந்து விட்டு மனித உரிமைகளை நசுக்கும் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளது.

எமக்கு ஏற்கெனவே இருந்த பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் தற்போதைக்கு அமுலுக்குக் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம் என்றே நாம் கோருகின்றோம்.

தற்போதைக்கு கொண்டு வரப்படவிருக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்புச்சட்டம் பயங்கரவாதத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு கேள்வி கணக்குக்கு உட்படுத்த முடியாத மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குகிறது.

அத்துடன் நீதிமன்றத்திற்கும் வகைப் பொறுப்புக் கூறும் வாய்ப்பைக் கூட மறுதலிக்க இடமுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அச்சட்டமே மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு பயங்கரமாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.

ஆயினும், நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தின் முதலாவது வாசிப்பு இ;டம்பெற்றபொழுது சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் வாய் மூடி மௌனம் காத்தது கவலையளிப்பதாய் இருந்தது.

ஆகையினாலேயே இச்சட்டம் அமுலுக்கு வரும்பொழுது நாட்டில் மனித உரிமைகள் என்கின்ற விடயம் கேள்விக்குரியதாகி விடும்.

வருமுன் காப்பதே மேல் என்பதால் சமூகத்தின் சகல மட்டங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு இவ்விடயத்தைத்  தெளிவுபடுத்தவேண்டிய தேவை உள்ளது.

அரசியல்வாதிகள், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வமத ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினருக்கும் புதிய வடிவில் வரும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் கடுமையான முகத்தைத் தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் மேயர், பிரதி மேயர், நகர சபைத் தலைவர், பிரதித் தலைவர், பிரதேச சபைத் தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்  தொடர்பான பாதக விளைவுகள் பற்றித் தெளிவுரைகள் வழங்கப்படவுள்ளன.” என்றார். ‪‬

SHARE

Author: verified_user

0 Comments: