8 Jan 2019

எறாவூர் நகர பிரதேசத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை, விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மும்முரம்

SHARE
எறாவூர் நகர  பிரதேசத்தில் அதிகரித்துள்ள தெருநாய்களின் பெருக்கத்தைக் குறைக்கும் முகமாகவும் மனிதர்களை விசர் நாய்க்கடியிலிருந்து பாதுகாக்கும் முகமாகவும் நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர பிதா இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றும்   விடயமாக செவ்வாய்க்கிழமை 08.01.2019 மேலும் கருத்துத் தெரிவித்த நகர பிதா,

அரச கால்நடை வைத்திய அதிகாரிகளின் உதவியோடு இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர பிரதேசங்களில் அலைந்து திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதுடன் விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றி அதன்மூலம் மனிதர்களை விசர் நாய்க்கடியிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாகவும் தேவைக்கேற்ப தொடர்ந்து இந்நடவடிக்கை இடம்பெறும்.” என்றார்.

இந்நடவடிக்கையில் மட்டக்களப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மட்டக்களப்பு பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் எம். அப்துல் ஹாதியின் இணைப்பாக்கத்தில் கால்நடை வைத்தியர்களான சி. துஷ்யந்தன், பிரியங்கி ரத்னாயக்க, ஏ.பி.டபிள்யூ. உதயனி உட்பட இன்னும் பல கால்நடை வைத்தியப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கெடுத்தனர்.‪‬

இதுவரை சுமார் 35 இற்கு மேற்பட்ட அலைந்து திரியும் தெருநாய்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டதாகவும் சுமார் 40 நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டதாகவும் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் ஏ.ஆர். ஷியாஹ{ல் ஹக்  தெரிவித்தார்.

ஏறாவூர் - புன்னைக்குடா வீதி பொதுச்சந்தை, தற்காலிக பொதுச்சந்தை, விலங்கறுமனை, ஏறாவூர் பொலிஸ் நிலையம், பெண்கள் சந்தை, வாவிக்கரைப் பகுதி,  திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைய சுற்றுவட்டாரம் ஆகிய இடங்களில் தெருநாய்கள் அலைந்து திரிவதாக பொதுமக்களிடமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நகர சபை நிருவாகத்திற்கு புகார்கள் கிடைத்திருந்தன.





SHARE

Author: verified_user

0 Comments: