24 Jan 2019

அரசாங்க தகவல் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

SHARE
அரசாங்க தகவல் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கமைய அமுல்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புவாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது.

இந்த வரிசையில் அரசாங்கத் தகவல் திணைக்களம்,  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் பாடசாலை மட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினை புதன்கிழமை (23) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடாத்தியது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக இக்கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்தார். 
மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர்  திருமதி  சுதர்சினி சிறிகாந்த் 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இச்செயலமர்வில் போதைப்பொருள் பாதிப்புக்கள், சமூக மட்டத்தில்  இளம் சமுதாயம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இலங்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அமுல்படுத்தப்படும் சட்டவாக்கங்கள் பற்றிய விரிவான செயல்முறையிலான விளக்கவுரைகள் இடம்பெற்றன. 

இக் கருத்தரங்கில் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் போதைப்பொருள் பாவனைக்கு விற்பனையாளர்களா, பாவனையாளர்களா காரணம் என்ற தலைப்பிலான பட்டிமன்றம் கழகத்தின் தலைவர் இன்பராசா தலைமையில் நடைபெற்றது. 

வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலை மன நல வைத்தியர் யூடீ.ரமேஷ் ஜெயக்குமார் போதைப்பொருள் பாவனையும், அதன் உடல், உள சமூகத் தாக்கங்களும் என்ற தலைப்பில் விளக்கவுரை வழங்கினார்.

போதைப் பொருளுக்கு அடிமையாதல், அதற்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு என்ற தலைப்பில் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் கருத்துரை வழங்கினார். 

அத்துடன், போதைப்பொருள் பாவனையும் சிறுவர் துஸ்பிரயோகமும் என்ற தலைப்பில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.குகதாசன் விளக்கவுரை வழங்கினார்.  

இந்நிகழ்விற்கான அனுசரணையினை மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் வழங்கியிருந்தது. 

இக் கருத்தரங்கில் 250 இற்கும் மேற்பட்ட மட்டக்களப்பு நகரம் மற்றும் நகரையண்டிய பிரதேச பாடசாலைகளின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் சுற்றறிக்கைக்கமைய சகல அரச திணைக்களங்களும்  தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளினால் எதிர்கால சமுதாயம் பாதிக்கப்படுவதனால் ஏற்படும் தீமைகள் பாதுகாப்பதற்கான வழிகள், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில்  இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.









SHARE

Author: verified_user

0 Comments: