31 Jan 2019

போதை தடுப்பு பாடசாலை வாரத்தினை கொண்டுவந்த ஜனாதிபதி மதுபானநிலையங்களை மூடாமை கவலையளிக்கின்றது.

SHARE
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளில்  போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை  அமுல்படுத்திய நாட்டினது ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேன அதே வாரத்தில் மதுபானசாலை நிலையங்களை மூடாமை கவலைளிக்கின்றதென மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு வார மாணவர்களுடனான கலந்துரையாடலில் இதனைக்குறிப்பிட்டார்.

சபையின் தவிசாளர் தொடர்ந்தும் அங்கு கூறுகின்ற போது,
போதைப்பொருள் பாவனையின் காரணமாக பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் போதைப்பொருள்களைப் பாவிக்கின்ற போது பிள்ளைகள் அவற்றினை பார்க்கின்றனர். இதனால் இதற்குள் தூண்டப்படுகின்றனர். 

அதேநேரம் குடும்பத்தில் உள்ளோர் புகைத்தல் போன்ற போதைகளில் ஈடுபடுகின்ற போது, அருகில் உள்ள பிள்ளைகளும் அவற்றினை சுவாசிக்கின்றனர். இதனால் பிள்ளைகளும் நோய்களுக்குள் உள்ளாகின்றனர். இவற்றினை பெற்றோர்களுக்கு எடுத்துச் சென்று போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான செயற்பாடுகளை மாணவர்களும் மேற்கொள்ள வேண்டும். எதிர்காலச் சமுகம், தற்கால மாணவர்களே, மாணவர்களின் மூலமாகவே போதையற்ற நாட்டினை உருவாக்க முடியும்.

பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் நடைபெறுகின்றன. இவற்றினை எமது பிரதேசத்தில் உள்ளவர்கள் அருந்துகின்றனர். இதனால் பாரிய நோய்களுக்கு ஆளாகுகின்றனர். இவற்றினைத்தடுப்பதற்கு நாங்களும் சபையிலேயே பல தீர்மானங்களையும் கொண்டுவந்திருக்கின்றோம். இன்னமும், இது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், தடுப்பதற்கான புதிய உத்திகளையும் பல திணைக்கள உத்தியோகத்தர்களின் கூட்டுமுயற்சியுடன் எதிர்காலத்தில் தடுப்பதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உபதவிசாளர், உள்ளிட்ட சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு குறித்த பாடசாலையில், மாணவர்களின் கலந்துரையாடல், சத்தியப்பிரமாணம், பொலிஸாருடனான கலந்துரையாடல், பெற்றோருடனான கலந்துரையாடலும், நிகழ்வுகளில் மதுசாராயத்தினை பயன்படுத்தமாட்டேன் என்ற பெற்றோரின் உறுதியுரையும், விழிப்புணர்வு ஊர்வலமும், அரசியல்வாதிகளுடனான கலந்துரையாடலும் பாடசாலையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 







SHARE

Author: verified_user

0 Comments: