18 Dec 2018

கிழக்கில் பட்டதாரிகள் நியமனத்திற்கு வெளி மாகாணங்களிலிருந்தும் கோரப்பட்டிருக்கும் திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரல் உடன் நிறுத்தப்பட வேண்டும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
கிழக்கில் பட்டதாரிகள் நியமனத்திற்கு வெளி மாகாணங்களிலிருந்தும் கோரப்பட்டிருக்கும் திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரல் உடன் நிறுத்தப்பட வேண்டும் கிழக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை 31(அ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு வண்ணப்பம் கோரப்பட்டிருப்பது உடன் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண  முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை 18.12.2018 அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பட்டதாரிகளுடன் சேர்த்து மேலதிகமாக பதுளை, பொலநறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வாழும் பட்டாதாரிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களப் பாடசாலைகளுக்கான நியமனம் என்ற ரீதியில் வெளி மாகாண பட்டதாரிகளை கிழக்கில் உள்வாங்கிக் கொள்வதற்காகவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இது கிழக்கு மாகாணப் பட்டதாரிகளை வெகுவாகப் பாதிக்கும்.
இது குறித்து மாகாண மட்டத்தில் இயங்கும் பல்வேறு பட்டதாரிகள் அமைப்புகள் எனது கவனத்துக்கு முன்வைத்திருக்கின்றன.

எனவே, முதலில் இந்த விண்ணப்பக்கோரலை உடன் ரத்து செய்ய வேண்டும். தற்போது பதவி ஏற்றுள்ள பிரதமரது அமைச்சரவை நியமனங்கள் நடைபெற்ற பின்னர் நான் பிரதமரை நேரில் சந்தித்து இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பேன்;.
நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்புக் கிடைக்காத பட்டதாரிகளை  ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வந்தேன். கிழக்கை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட கிட்டதட்ட 5400க்கும் அதிகமான பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்பில் தமக்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அந்தவகையில் எனது முயற்சியின் மூலமாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு இந்த விடயத்தை முன்வைத்தேன்.

பிரதமரின் ஆலோசனைக்கு 5400 பேருக்கும் நியமனம் வழங்குவது எனவும் முதற்கட்டமாக 1700 பேருக்கு வழங்க இடம் ஒதுக்கப்பட்டு இதற்கான நிதி; ஒதுக்கீடும் திறைசேரியால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாகாணசபை ஊடாக நாம் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சைகளை நடத்தினோம் இதன்போதும் வெளி மாவட்டங்களை சேர்ந்தோரை உள்வாங்கவேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது. எனினும் நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

இக்கால வேளையில் மாகாணசபை கலைக்கப்பட்டமை காரணமாக இந்த விடயம் காலதாமதத்துக்கு உள்ளானது பின்னர் இந்த நியமனங்களில் 1300 நியமனங்களை 2017 நவம்பரில் ஆளுநர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது எம்மால் பெறப்பட்ட வெற்றிடமாகவுள்ள ஏனைய இடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பைப் பிரதான நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த வாய்ப்பை வேறு எந்த விதத்திலும் - நியாயமற்ற முறையிலும்; கடந்த காலங்களைப் போன்று வழங்க எடுக்கப்;படும் திரை மறைவு முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

SHARE

Author: verified_user

0 Comments: