22 Nov 2018

உரமானியம் அம்பாறை விவசாயிகளுக்கு எட்டாக்கனி கவலையோடு விவசாயிகள்

SHARE
(ஏ.எச்.ஏ) 

விவசாயிகளின் நலன் கருதி கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உர மானியத் திட்டத்தின் நன்மைகள் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகவே தொடர்ந்து இருந்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது அந்த மாவட்டத்தில் நெற் செய்கை ஆரம்பித்து சுமார் 45 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அம்பாறை மாவட்ட நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய  உர வகைகள் இன்னும் வழங்கப்படாததன் காரணமாக நெற்பயிர்கள் போஷ‪ணையின்றிவீரியமிழந்து குன்றிக் காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பெரும்போகச் செய்கையை நம்பி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கமநல சேவை  திணைக்களத்தின் ஊடாக பசளைக்கான முன்வரி விண்ணப்பத்தை விதைப்புக்கு முன்னராகவே சமர்ப்பித்த நிலையில் தற்போது ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டன.

ஆனால், உரமானிய விநியோகம் எப்போது கிடைக்கும் என்ற எந்தவிதமான உத்தரவாதமும் விவசாய அதிகாரிகளால் விவசாயிகளுக்கு வழங்கப்படாததால் விவசாயிகள் நம்பிக்கையிழந்துள்ளனர்.

இதேவேளை, கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாக சில வட்டவிதானைமார் பயிர்ச் செய்கைக்கு உகந்த பசளையை பெறாது தேவையற்ற மற்றுமொரு பசளையை பெற்று விவசாயிகளுக்கு  வழங்க முன்வந்திருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகளுக்கு அத்தியாவசியமாக வழங்க வேண்டிய யூரியா பசளை தமது கையிருப்பில் இல்லை என தெரிவித்து சம்மந்தப்பட்ட தரப்பினர்  ஏமாற்றுவதாக தெரிவித்துள்ள விவசாயிகள் உரிய காலத்தில் மேற்படி பசளைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நெற்செய்கையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது தாம் பெரும் நஷ‪;டத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபற்றி விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், செய்கையில் ஈடுபடும் எந்தவொரு விவசாயிக்கும் இதுவரை உரமானியம் வழங்கப்படாதது குறித்து விவசாயிகள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார்கள்.

விதைப்பு இடம்பெறுவதற்கு முன்னதாகவே உரிய வேளையில் உரம் கிடைக்க வேண்டும். இல்லையேல் அது பிரயோசனமற்ற ஒன்றாக மாறிவிடும்.

ஒரேபருவ காலநிலையிலுள்ள கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் ஏற்கெனவே உர விநியோகம் உரிய வேளையில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விவசாய அமைச்சரும் அதிகாரிகளும் அசமந்தப் போக்கில் இருப்பது கவலையளிக்கிறது.

இந்த நிலைமை தொடருமாயின் அம்பாறை மாவட்டம் நெல் விளைச்சலில் பின்னடைவுக்குத் தள்ளப்படும்.

எனவே, இது குறித்து விவசாய அமைச்சரும் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொது தனியார் வியாபாரிகளிடம் கடன்பட்டு அதிக விலைக்கு உரம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: