14 Nov 2018

இளைய சமதாயத்தை தவறாக வழிநடாத்தும் வகையில் மட்டக்களப்பு படமாளிகை முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த திரைப்பட நடிகர் இளைய தளபதி விஜயின் கட்அவுட் அகற்றப்பட்டது

SHARE
இளைய சமதாயத்தை தவறாக வழிநடாத்தும் வகையில் மட்டக்களப்பு படமாளிகை முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த திரைப்பட நடிகர் இளைய தளபதி விஜயின் கட்அவுட் அகற்றப்பட்டது
இளையோர் சமுதாயத்தை தவறாக வழிநடாத்தும் வகையில் அமைந்துள்ளது எனக் கருதி மட்டக்களப்பிலுள்ள படமாளிகையொன்றின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த இளைய தளபதி விஜயின் கட்அவுட் அகற்றப்பட்டது.

மட்டக்களப்பு - கல்லடி   சந்தியில்  பொருத்தப்பட்டிருந்த சர்க்கார் திரைப்படத்தின் கதாநாயகன் விஜயின்  பிரமாண்டமான ”கட்அவுட்டே”  மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளரின் எழுத்துமூல அறிவுறுத்தலுக்கமைய அகற்றப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சிகரட் புகைக்கும் விதத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த கட்அவுட் அமைந்திருந்தது.

இது குறித்து மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என். தனஞ்ஜெயன் படமாளிகை முகாமையாளருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, தங்களின் படமாளிகையின் முன்பாக இளைஞர் சமுதாயத்தை தவறான பாதையில் இட்டுச் செல்லும் வகையில் பதாதைகளைக் காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பாக இது இளைஞர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்பதால், இதனை அகற்றுமாறு தங்களைப் பலமுறை எச்சரித்திருந்தும் அப்பதாதையை இதுவரை அகற்றாதுள்ளீர்கள்.

எனவே, இதனை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொள்வதோடு தவறும்பட்சத்தில் சினிமாப் படங்களை வெளியிடுவதற்கு மாநகர சபையால் வழங்கப்பட்ட தங்களுக்கான அனுமதி இரத்துச் செய்யப்படும் என்பதையும் அறியத் தருகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இறுதி எச்சரிக்கை அறிவித்தலின் பின்னர் சர்ச்சைக்குரிய விஜயின் சிகரெற் புகைக்கும் காட்சியிலமைந்த கட்அவுட் சம்பந்தப்பட்ட படமாளிகை நிருவாகத்தினரால் உடனடியாக அகற்றப்பட்டது.

மேற்படி கட்அவுட்டிலுள்ள புகைப்படம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைப்பதாகவும் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற ரீதியில் கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு அமையவே மேற்படி கட்அவுட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது  என மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: