19 Nov 2018

கல்வியினூடாகவே அனைத்து அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள முடியும். பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ்

SHARE
கல்வியினூடாகவே அனைத்து அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள முடியும் என பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ்  தெரிவித்தார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழினுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் புலமை காட்டி, உயர் தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்பு உதவு  தொகை  வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெரண்டினா தொழில் வள நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட  வறிய குடும்பங்களைச் சேர்ந்த 143 மாணவர்களுக்கு மாதாந்த உதவு தொகையாக 1000-1500 ரூபாவும் அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி சகல ஆக்கபூர்வப் பாதைகளுக்குமான சிறந்த பாதையாக கல்வியைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் மாணவர்கள் தமது மாணவப் பருவத்தில் அநேக தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

மாணவர்களின் பருவம் என்பது பயமறியாது. அதேவேளை மாணவச் செல்வங்கள் என்றுதான் பொதுவில் நாம் அழைப்போம் அது ஏனெனில் எதிர்கால இந்த உலகத்தை சகல செல்வங்களும் நிறைந்ததாக உருவாக்கக் கூடிய ஆற்றல் தற்போதைய மாணவர்களுக்கே உள்ளது.

அதேவேளை பெற்றோரும் தங்களைத் தியாகம் செய்து மாணவர்களைத் தயார்படுத்தினால் தனிநபர்,  குடும்பம், சமூகம், பிரதேசம், நாடு என்று முன்னேற்றத்தின் எல்லை வியாபித்துக் கொண்டே இருக்கும்.

எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தோடு பயணிக்கும்போது எமது முன்னேற்றம் என்பது பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய நவீன தொழினுட்ப வசதிகளோடு கற்றலுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

ஆனால், நமது நோக்கத்தைச் சீரழிக்கக் கூடிய நவீன தொழினுட்ப தொடர்பாடல் வசதிகளும் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.

எனவே, கத்தி முனையில் நடப்பது போன்று மாணவர்களும் பெற்றோரும் எதிர்காலத்திற்காக தங்களை அர்ப்பணித்து அற்புதமான உலகத்தைப் படைக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பெரண்டினா தொழில் வள நிலையத்தின் மாவட்ட முகாமையாளர் சௌந்தரராசா தினேஸ், மட்டக்களப்பு கல்வி வலய உதவித் திட்டப் பணிப்பாளர் வை. சி. சஜீவன்,  திட்ட அலுவலர் எஸ். சுமேதா டில்ஷானி, போதனாசிரியர் பாலசிங்கம் உமைபாலா, வளவாளர் அழகையா ஜெகநாதன் உட்பட பயனாளிகளான மாணவர்கள்., பெற்றோர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: