1 Nov 2018

'இயற்கையுடன் இணைந்து இசைந்து பயணிப்போம்” விவசாய விரிவாக்கல் திட்டம்

SHARE
'இயற்கையுடன் இணைந்து இசைந்து பயணிப்போம்” எனும் தொனிப்பொருளிலான வீட்டுத் தோட்ட விவசாய விரிவாக்கல் திட்டமொன்றை தாம் கிராமங்கள் தோறும் அறிமுகப்படுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்  வீ. பேரின்பராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி வலய விவசாய உதவி விரிவாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட விழிப்பூட்டல் தொடர்பான கருத்தரங்கு வவுணதீவு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற விவசாய உதவி விரிவாக்கல் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (30.10.2018) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்  வீ. பேரின்பராசா, மட்டக்களப்பு மத்தி வலய விவசாய உதவிப் பணிப்பாளர் எம். சலீம், மட்டக்களப்பு - தெற்கு வலய விவசாய உதவிப் பணிப்பாளர் எம். சிவஞானம், மற்றும் விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய  மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்  வீ. பேரின்பராசா,  வீட்டுத் தோட்டங்களை அமைத்து நஞ்சற்ற உணவைப் பெற்று நீண்ட ஆயுளைப் பெற வழியேற்படுத்த வேண்டும்.

இயற்கையுடன் இணைந்து, இசைந்து பயணிப்போம் என்பதற்கிணங்க தமக்குத் தேவையான விவசாய உற்பத்தியை தமது வீட்டு வளாகத்தினுள் சேதனப் பசளைகளைக் கொண்டு உற்பத்திசெய்வதுடன் மேலதிகமாக உற்பத்தியாகும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் தமது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

மேலும் பயிர்களுக்கு செயற்கை கிருமிநாசினிகளையும் செயற்கை பசளைகளையும் இடுவதன் விளைவாக மக்கள் பல வகையான உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.

பீடைத்தாக்கத்துக்கு பயன்படுத்தும் அதி சக்திவாய்ந்த நஞ்சுப் பொருட்கள் நாம் உண்ணும் இலைக்கறி, மரக்கறி உணவில் இலகுவில் கலந்துவிடும் சந்தர்பங்கள் அதிகம் உள்ளது.

இதனை பலர் அறிந்துகொள்வதில்லை அதேபோன்று இதைப்பற்றி பலர் அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடுகின்றார்கள்.

ஒரு தாய் தனக்குத் தெரியாமலே தன் குழந்தைக்கு விசத்தை ஊட்டுகிறாள் இந்த நிலை எதிர்காலத்தில் மனித உடல் உள ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தைச் செலுத்திப் பல பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும்.

அதற்கு நமது வீடுகளில் முடிந்தவரை ஒரு வீட்டுத் தோட்டத்தை அமைத்து நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்து நம் பிள்ளைகளுக்கு கொடுத்து நீண்ட ஆயுளைப் பெற வழியேற்படுத்த வேண்டும்.

இதற்கு மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியமானதாகும்.”  என்றார். 


SHARE

Author: verified_user

0 Comments: