12 Nov 2018

தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக இன முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. மட்டக்களப்பு நகர வர்த்தக சங்கச் செயலாளர் கே. தியாகராஜா.

SHARE
தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக இன முரண்பாடுகள் வேண்மென்றே ஏற்படுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை சீர்குலைக்கப்படுவதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் செயலாளர் கே. தியாகராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 11.11.2018 மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ்,   தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மதப் பிரமுகர்கள், வர்த்தகர்கள், மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய வர்த்தகர் சங்கச் செயலாளர், மட்டக்களப்பிலே இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்ததாக மட்டக்களப்பு வர்த்தகர் சங்கம் செயற்பட்டு வருகின்றது.
இந்த வர்த்தகர் சங்கத்தை அமைத்ததன் நோக்கமும் இப்பிரதேசத்திலே, நாட்டிலே இன ஒற்றுமையை ஏற்படுத்த இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவும் அந்யோன்ய வாழ்வும் வலுப்பெற  வேண்டும் என்பதேயாகும்.

இந்த வர்த்தகர் சங்கம் இன மத வேறுபாடுகளற்று இயங்குவதால் மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கிடையிலே கசப்புணர்வுகள் ஏற்படுவது மிகக் குறைவு.

சமூகங்களுக்கிடையே அவ்வப்போது வேண்டுமென்று குறித்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக ஒரு சிலரால் ஏற்படுத்தப்படுகின்ற அல்லது தூண்டி விடப்படுகின்ற இன, மத முரண்பாடுகளால் சமூகங்களுக்கிடையில் அமைதி குலைக்கப்படுவதும் அதன் விளைவாக இழப்புக்கள் ஏற்படுவதும் இயல்பு வாழ்க்கை சீர்குலைக்கப்படுவதும் இடம்பெறுவதை நாம் அனுபவத்தில் கண்டு வந்துள்ளோம்.

எனவே இத்தகையதொரு அமைதிக்குப் பங்கமான நிலைமையில் வர்த்தகர்களாகிய நாங்கள் வெறும் வர்த்தக இலாப நோக்கத்திற்கு அப்பால் இனங்களுக்கிடையிலான சௌஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் முக்கியத்துவமளித்துப் பணியாற்ற வேண்டும். அதுவே முழுமுதற் கடமையாக இருக்கின்றது.

மட்டக்களப்பு நகர வர்த்தகர்களைப் பொறுத்தவரை நாங்கள் மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்கான, அதேவேளை மட்டக்களப்பின் பலமான  வர்த்தகர்கள் அமைப்பாகவும் இருந்து சமூக சகவாழ்வுக்கான இப்பணிகளைச் செய்துவருகின்றோம்.” என்றார்.

இக்கலந்துரையாடலில், பிரதேச மட்டத்தில் ஏற்படுத்தப்படும் அமைதிப் பங்கமான செயற்பாடுகளை தவிர்ப்பதற்கு  மட்டக்களப்பு நகர வர்த்தக சங்க அமை;ப்பினர், மாவட்ட வர்த்தக சங்கத்தை அமைத்து இன ஐக்கியத்துக்கான தமது பணிகளை விஸ்தரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதுபற்றி மாவட்ட அரசாங்க அதிபருடனும் உயர்மட்ட அதிகாரிகளுடனும் ஏனைய பிரதேச மட்ட வர்த்தகர்கள் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி தீர்மானத்தை எட்டலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.



SHARE

Author: verified_user

0 Comments: