8 Jun 2018

அவுஸ்திரேலியாவில் இருக்கும் நபர் முறக்கொட்டான்சேனையிலுள்ளவருக்கு சாதி அடிப்படையில் தொந்தரவு

SHARE
வீதியால் பயணிக்கக் கூடாது, கிராமத்தில் வசிக்கக் கூடாது என்றும் அச்சுறுத்தல்பாதுகாப்பு வழங்குமாறு பாதிக்கப்பட்டவர் பொலிஸில் முறைப்பாடுதனக்கு சாதி அடிப்படையில் தொடர்ந்து தொந்தரவு தரப்பட்டு வருவதாகவும் வீதியால் பயணிக்கக் கூடாது, கிராமத்தில் வசிக்கக் கூடாது என்றும் அச்சுறுத்தல் விடுத்து வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி கிராமவாசியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் மன அளுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ள முறக்கொட்டான்சேனை முருகன் கோயில் வீதியை அண்டி வசித்து வந்த ஐயாத்துரை விவேகானந்தன் (வயது 35) எனும் சிகையலங்காரத் தொழிலாளியே ஞாயிற்றுக்கிழமை 03.06.2018 பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் சிகையலங்காரத் தொழில் புரிந்து ஜீவியம் நடாத்துகின்றேன்.

நானும் எனது மனைவியும் முறக்கொட்டான்சேனை கிராமத்தில் வசித்து வந்தோம். எனினும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தாழ்ந்த சாதிக் காரர்கள் எமது கிராமத்தில் வசிக்கக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருந்ததால் அச்சத்தின் காரணமாக நானும் எனது குடும்பமும் அங்கிருந்து வெளியேறி ஊரின் கடைக் கோடியில் தேவாபுரம் எனும் கிராமத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

எனினும், இன்னமும் அந்த நபரின் அச்சுறுத்தல் நின்றபாடில்லை. தான் உயர்சாதி எனக் கூறிக் கொள்ளும் அந்த அவுஸ்திரேலிய நபர் தொடர்ந்தும் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் முறக்கொட்டான்சேனை கிராம வீதியினூடாகப் பயணிக்கக் கூடாது என்று தற்போது புதிய அச்சுறுத்தலை விடுத்து வருகின்றார்.

எனவே, இந்த வித மனிதாபிமானமற்ற சாதிக் கொடுமையிலிருந்தும் அச்சுறுத்தல் தொந்தரவுகளிலிருந்தும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதுகாக்குமாறும் நாட்டுப் பிரஜை என்கின்ற வகையில் எனக்குரிய மனித உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் பொலிஸாரைக் கேட்டுள்ளார்.

எந்தவொரு பிரஜையையும் கிராமத்தில் வசிக்கக் கூடாது என்றோ வீதியில் பயணிக்கக் கூடாது என்றோ எவரும் அச்சுறுத்தவும் தொந்தரவு செய்யவும் மன உளைச்சலுக்குள்ளாக்கவும் முடியாது என்று தெரிவித்த பொலிஸார் இந்த முறைப்பாடு குறித்து தாம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர்.


SHARE

Author: verified_user

0 Comments: