4 Jun 2018

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் டெங்கு சிரமதானப் பணி.

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின், பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஆகியன கூட்டாக இணைந்து டெங்கு சிரமதானப் பணியை சனிக்கிழமை கிழமை (02) மேற்கொண்டனர்.
கோட்டைக்கல்லாறு பகுதியில் டெங்குநோயினால்  27 பேர் இணங்காணப்பட்டதையடுத்து  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடந்த புதன்கிழமை எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், சுகாதார வைத்திய அதிகாரியின் விஷேட பரிந்துரைக்கு அமைவாகவும் இச்சிரமதானம் நடைபெற்றது.

டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகும் வெற்றுப்போத்தல்கள், பிளாஸ்ரிப்பொருட்கள், பொலீத்தின், உட்காத பொருட்கள், பற்றைக்காடுகள் போன்றன டெங்கு சிரமதானத்தின் போது அகற்றப்பட்டதுடன், பொதுமக்களினாலும், வழிப்போக்கரினாலும் இனிமேல் பொதுஇடங்கள், பாழடைந்த கட்டிடங்கள், வீடுகளில் கழிவுகளை வீசுவதை நிறுத்த வேண்டும் என இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்களும், ஆலோசனைகளும், வழங்கப்பட்டன. 

இச்சிரமதானத்தின்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் கே.லக்ஷிமிகாந்தன், பிரதேசசபையின் உப தவிசாளர் திருமதி.ரஞ்சினி கனகராசா, பிரதேச சபை உறுப்பினர்களான த.ஜயேந்திரராசா, த.சுதாகரன், செல்வி.ர.சுகன்யா, பொதுச்சுகாதார பரிசோதகர் ப.யதுநாதன் உட்பட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், கிராமசேவை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டார்கள். 






SHARE

Author: verified_user

0 Comments: