11 Sept 2016

மஹிந்த சிந்தனை பற்றி சிந்திக்கும் அரசாங்க அதிகாரிகள்;, அச்சேவைக்கு பொருத்தம் அற்றவர்கள்'

SHARE
அரசாங்க அதிகாரிகள் இப்போது மஹிந்த சிந்தனையைப் பற்றி சிந்திப்பார்களாயின், அவர்கள்; அரசாங்கச்  சேவைக்கு பொருத்தம் அற்றவர்கள்; என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திராய்மடுப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்புதிய கட்டடம் 804 மில்லியன் ரூபாய்  செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கடந்த காலத்தில்; மஹிந்த சிந்தனையை சிறப்பாக நிறைவேற்றியவர் சிறந்த அதிகாரி என்று சொல்வேன். மஹிந்த சிந்தனைக்கே கடந்த காலத்தில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது புதிய ஆணையின் படி அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும்' என்றார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இலட்சத்து 18,000 பேரைக் கொண்ட சனத்தொகை உள்ளது. இங்கு 168,000 குடும்பங்கள் உள்ளன. இந்தக் குடும்பங்கள் அனைத்தையும் கவனிப்பதற்காக 2,500 அதிகாரிகள் இங்கு இருக்கின்றார்கள். இந்த நாட்டில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்குப் பின்னரும் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்துக்குப் பின்னரும் புதிய அரசியல் கலாசாரம், நிர்வாக முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலும் அரசாங்க நிர்வாகமும் வேறுபட்டவை என்று இங்குள்ள அதிகாரிகள் நினைக்கக்கூடும்.

ஆனால்,  அரசியலும் அரசாங்க சேவையும் ஒன்றேயாகும். அது அரசியல் யாப்புக்கிணங்க ஒன்றுபட்டிருக்கின்றது' என்றார். 'மேலும், அரசாங்க அதிகாரிகளுக்கு இருக்கின்ற 2 சிறப்பம்சங்களில் ஒன்று வாக்குரிமையைப் பயன்படுத்துவது மற்றையது வாக்குகளை எண்ணுவதாகும். வாக்குகளை எண்ணும் வேலை முடிவடைந்தவுடன் நியமிக்கப்படும் அதிகாரத்துக்கு வருகின்ற ஆட்சியின் கொள்கைளை நடைமுறைப்படுத்துவதே அதிகாரிகளின் பொறுப்பாகும். மேலும், இந்த அதிகாரிகள் மக்களை கவனிக்கின்றார்களா என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிகாரிகள் என்பவர்கள் வேறு குழுமம் இல்லை. அன்பு, கருணை, பணி ஆகியவற்றுடன் மக்கள் பிரச்சினைகளை அதிகாரிகள் பார்க்கவேண்டும். இயலாது என்று கூறி மக்களை துரத்தமுடியாது. 

மக்களின் தேவைகளை செய்துகொடுப்பதற்கு தயாரில்லையாயின், ஏனைய துறைகளில் தொழில்களை தேடிக்கொண்டு அவர்களால் போகமுடியும்' என்றார். 'பிரதேச நிர்வாகம் என்பது மிக முக்கியமானது. எனது அமைச்சின் கீழ் 25 நிர்வாக மாவட்டங்களும் 332 பிரதேச செயலங்களும் 14,022 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளும் உள்ளன. காணிப்பதிவுத் திணைக்களமும் பிறப்பு மற்றும் இறப்பு, விவாகப் பதிவுகளை செய்யும் திணைக்களமும் எமது அமைச்சின் கீழேயே உள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு  அதிக நிதியை ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம்; கேட்டுள்ளார்கள். இன்னும் ஓரிரு வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்ய எண்ணியுள்ளோம். அரசாங்கச் சேவை சுதந்திரமாக இருக்க வேண்டும். அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றாக பயணிக்க வேண்டும்'; எனவும் அவர் கூறினார்.   
SHARE

Author: verified_user

0 Comments: