24 Aug 2016

தற்போதைய நல்லாட்சியில் கூட எங்களது நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது.

SHARE
தற்போதைய நல்லாட்சியில் கூட எங்களது நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. வரலாறு தெரியாதவர்களாக மாற்றப்படுவோமோ? என்ற கேள்வி இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த நேரத்தில் எங்களை நாங்கள் அறிய வேண்டும். அதற்கு வரலாற்று நூல்கள் வெளிவரவேண்டியது அவசியமாகின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

முருகு தயாநிதியினால் எழுதப்பட்ட அம்பிலாந்துறை வரலாற்று நூல் வெளியீட்டு விழா  ஞாயிற்றுக்கிழமை (21) அம்பிலாந்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் சிவமுத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற போது அதில் முன்னிலையாளராக கலந்து உரையாற்றுகையிலே இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் நூலூசிரியர், அதிதிகள், சேவையாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நூலின் முதல் பிரதி புவனேசராசாவிற்கு வழங்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஒரு நாட்டின் வரலாறு, ஒரு சமூகத்தின் வரலாறு அங்கே இருக்க கூடிய மக்களை வைத்துதான் வரலாற்றை ஆராய வேண்டும். இன்று நாங்கள் வரலாற்று ரீதியான, மரபு ரீதியான, கலாசார ரீதியான, விழுமியங்கள் ரீதியான பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றோம்

வரலாறு தெரியாதவர்களாக நாங்கள் இருப்போமானால் எங்கள் வரலாறு மறைக்கப்படும். எங்கள் இனத்தின் வரலாறு இல்லாமல் போகின்ற நிலைகூட இருந்து கொண்டிருக்கின்றது. இருநூறு, முந்நூறு ஆண்டுகால வரலாறுகளை கதைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று இருக்கின்ற அரசியல் சூழலை பார்க்கின்ற போது எங்கள் வரலாறுகள், நிலங்கள் என்பவற்றை சுரண்டிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது

நாங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட அரசியல் சூழ்நிலையில் இருந்து கொண்டு சர்வதேசத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை விரல்நீண்டி தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை கொடுங்கள் என்ற பார்வையில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: