போராட்டம் இடம்பெற்ற கடந்த 30 வருட காலத்தை மீள்நோக்கிப் பார்க்கும்பொழுது இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு பிரதான தோற்றுவாயாக இருந்தது, மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட விடயமே ஆகும் என சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ((Institute of Social Development) பணிப்பாளரும், ஆய்வாளரும், எழுத்தாளருமான பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாசிக்குடாவிலுள்ள அமாயா சுற்றுலா உல்லாச விடுதியில் செவ்வாயன்று (ஓகஸ்ட் 02, 2016) நிலைமாறு கால நீதிச் செயன்முறைகளில் சிவில் சமூகத்தின் பங்கேற்பு தொடர்பான வதிவிடச் செயலமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மனச்சாட்சிகள் மையங்கள் தொடர்பான சர்வதேச கூட்டமைப்புடன் (International Coalition of Sites of Conscience) இணைந்து சமூக அபிவிருத்தி நிறுவனம் (Institute of Social Development) இந்த செயலமர்வை நடாத்துகின்றது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 30 சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய முத்துலிங்கம்,
தோட்டத் தொழிலாளர்களான மலையக மக்களின் பிரஜா உரிமை 1948ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்தினூடே மறுக்கப்பட்டது.
இலங்கை தமிழ் காங்கிரஸ் செயற்பாடுகளின் விளைவாக மலையகத்தவர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டதை முன்னிறுத்தி ஆக்ரோஷமடைந்த தந்தை செல்வா அவர்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி தழிரசுக் கட்சியை ஆரம்பித்தார்.
தோட்டத் தொழிலாள மக்கள் பிரஜா உரிமை அற்ற நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதன் பின்னணிதான் தமிழ் பேசும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெறுவதற்கான சிந்தனைத் தளத்தை உருவாக்கியது.
தமிழரசுக் கட்சியை உருவாக்கும்போது முன்வைக்கப்பட்ட 4 கோரிக்கைகளில் மலையக மக்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையும் இடம்பெற்றிருந்தது.
1948 ஆம் ஆண்டு ஆரம்பித்த மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக பகுதி பகுதியாக பிரஜாவுரிமை வழங்கப்பட்டு 2003ஆம் ஆண்டு முழுமையாகத் தீர்க்கப்பட்டு முடிவுக்கு வந்தது.
இந்த வேளையில் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் பேசும் இலங்கை சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கின்றது என்கின்ற வரலாற்று உண்மையையும் மறந்து விட முடியாது.
மலையகம், வடக்கு கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் சமூகம் மற்றும் தோட்டத் தொழிலாள மக்கள் ஆகியோருக்காக இலங்கைத் திராவிட இயக்கம் குரல்கொடுத்து வந்திருக்கின்றது என்பதை நாம் வரலாறு நெடுகிலும் காணக் கூடியதாகவுள்ளது.
அந்த இயக்கத்தைப் பற்றி நான் ஆய்வு செய்தபோது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு வரலாற்றுப் பதிவு அவசியம் தேவை என்பதை நான் உணர்ந்து கொண்டு அதன் பின்னர் எனது அயராத முயற்சியினால் கண்டியிலே ஒரு அருங்காட்சியகத்தை நான் உருவாக்கியிருக்கின்றேன்.
எனது 10 ஆண்டு முயற்சியின் பயனாக 2007 ஆம் ஆண்டு அந்த அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
எனவே, மாறிவருகின்ற சூழலில் எப்பொழுதுமே வரலாற்றுப் பதிவுகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை எமக்கு வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன.
தற்போதைய யுத்தம் முடிவடைந்துள்ள சூழலில் அடுத்த முன்நகர்வுகள் பற்றி மக்களிடம் எந்த வித தெளிவுகளுமில்லாமல் இருக்கின்றது.
ஏதோ நடந்து விட்டது எங்களது விதி இதுதான் என்று மக்கள் இருப்பது போலத்தான் தோன்றுகின்றது.
அதேநேரத்தில் எமது அடுத்த சந்ததிக்கு இந்த நாட்டில் கடந்த 3 தசாப்த காலமாக ஏற்பட்டிருந்த துயரம் இனி ஒரு போதும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்கின்ற வைராக்கியம் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.” என்றார்.
0 Comments:
Post a Comment