30 Aug 2016

அரசமைப்பு உருவாக்கத்தின் ஆணிவேர் இந்த நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பதிலேயே பதிந்து நிற்கின்றது - கிழக்கு விவசாய அமைச்சர்

SHARE
நாட்டின் பொருளாதார விருத்தி, நல்லுறவு, உலக அங்கீகாரம் என்பன உற்பத்தி அதிகரிப்பாலோ, பௌதீகவள அபிவிருத்தியால் மாத்திரம் கிடைக்கப் பெறுவன அல்ல மாறாக தேசியப் பிரச்சினையின் தீர்வு ஒன்றுதான் இதற்கான மூலோபாயம்,
அரசமைப்பு உருவாக்கத்தின் ஆணிவேர் இந்த நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பதிலேயே பதிந்து நிற்கின்றது இதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாய உற்பத்திகளைப் பெருக்கிடும் மூன்றாண்டுத் திட்டத்தின் அம்பாறை மாவட்டத்தில் திங்கட் கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதன்போது அவர் மெலும் குறிப்பிடுகையில்..

விவசாயம் செழித்தால்தான் நாட்டின் ஆட்சி நல்லாட்சியாய்ச் சிறக்கும் அதற்கு ஆட்சியை நடைமுறைப்படுத்தும் அரசன் மக்களின் வாழ்த்துதலைப் பெறுவான் என ஒளவை எனும் தழிழ்ப் புலவர் புகழ்கின்றார்;. இத்தகு முக்கியத்துவத்துக்குரிய விவசாயம்தான் வேடுவனாய், மந்தை மேய்ப்பவனாய் அலைந்த மனிதனை நதிக் கரைக்கு அழைத்து, நாகரீகத்தைப் பயிற்றுவித்து, தர்மத்தைப் புகட்டி தலைசிறந்த வாழ்வை மானிடத்துக்கு நல்கியது. 

இந்த மரபு முறையிலேதான் நம் நாட்டு மன்னனான குளக்கோட்டன் குளங்கள் பல அமைத்து வளங்கள் பல பெருக்கினான், மின்னேரித் தெய்வமாம் பராக்கிரமபாகு ஒரு துளி மழைகூட வீணே கடலில் கலக்கக் கூடாதென்ற கொள்கையுடையவனாய்க் குளங்கள் அமைத்துப்; புகழ்பெற்றான்.

இம் மான்புறு வழியைப் பின்பற்றியதால் தான் நமது ஐனாதிபதி அவர்கள் விவசாய உற்பத்திகளைப் பெருக்கிட மூன்றாண்டுத் திட்டத்தை வகுத்துள்ளார். அதன் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக மாகாணம் மற்றும், மாவட்டங்கள் தோறும் சென்று உற்சாகமூட்டி வருகின்றார். 

இவ்வகையிலே இன்று கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்துக்கான வரவு அமைகிறது. மழையைப் பொழிவித்து மக்களைக் காப்பவன் சூரியன், வேற்றுமை காட்டாது சமனான பரிபாலனம் செய்பவன் சூரியன் அதற்கு சூரியனைப் போன்ற ஆட்சியைத்தான் நாம் விரும்புவதாக, ஆடைத் தொழிற்சாலை திறந்துவைக்க ஏறாவூருக்கு வந்தபோது ஐனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தச் சூரியனின் உதய பூமிக்கு வருக, வருகவென கிழக்குவாழ் மக்களின் சார்பில் அரசுத்தலைவர் அவர்களை வரவேற்று நிற்கின்றேன். 

இரண்டாம் உலகப் போர் மக்களை அழித்தது, வளங்களை இல்லாதொழித்தது, பஞ்சத்தைப் பரிசாகக் கொடுத்தது. இதினின்றும் மீட்சி பெறுதற்காய் பசுமைப் புரட்சியை உலக நாடுகள் அறிவித்தன விவசாயம் பெருகியது, உச்சநிலை கண்டது, வியக்கத்தக்க விருத்தியாய்ச் செழித்தது.

இதன்போது அதிகரித்த இரசாயனப் பாவனையின் காரணமாக தொற்றா நோய்களால் மனித வாழ்வு அவலத்துள் வீழ்த்தப்பட்டது. இதன் கோரம் தணிக்கவே நம் அரசுத் தலைவர் அவர்கள் இயற்கையோடு சேர்ந்த விசமற்ற விவசாயத்தை ஊக்குவித்து நிற்கின்றார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சு இவ் வேலைத் திட்டத்தில் அரசுத் தலைவருக்குக் கைகொடுத்து உழைக்கும் இன்றைய நிலையிலே தேசிய அளவிலே நெல் உற்பத்தியில் 25 வீதத்தையும், ஏனைய பயிர்ச் செய்கையால் 13 வீதத்தையும், மரக்கறி உற்பத்தியால் 6 வீதத்தையும், பால் உற்பத்தியால் 17 வீதத்தையும், மீன் உற்பத்தியால் 20 வீதத்தையும் நாங்கள் பங்களிப்புச் செய்கின்றோம். இனிவரும் காலங்களில் மத்திய அரசின் உதவியோடு இவ் வீதங்களை அதிகரித்திட உழைப்போம் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றோம். 

நாட்டின் பொருளாதார விருத்தி, நல்லுறவு, உலக அங்கீகாரம் என்பன உற்பத்தி அதிகரிப்பாலோ, பௌதிகவள அபிவிருத்தியாலோ மாத்திரம் கிடைக்கப் பெறுவன அல்ல மாறாக தேசியப் பிரச்சினையின் தீர்வு ஒன்றுதான் இதற்கான மூலோபாயம், நாட்டின் மொத்த சக்தியும் பயன்பாட்டுக்கு வரும். 

இந்த இலக்கை அடைவதற்காகத்தான் புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தில் இன்றைய அரசு ஊன்றி உழைக்கின்றது. அரசமைப்பு உருவாக்கத்தின் ஆணிவேர் இந்த நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பதிலேயே பதிந்து நிற்கின்றது என்பதனை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். 2015 பெப்ரவரி 04 இல் காலிமுகத்திடலில் வைத்து வெளியிடப்பட்ட சுதந்திரதினப் பிரகடனத்தில் நமது அரசுத்தலைவர் இச் செய்தியினைத் தெளிவாகவே பறைசாற்றியுள்ளார். 2016 பெப்ரவரி 4ல் தேசிய தினத்தன்று ஒலித்திட்ட தமிழ்மொழி மூலமான தேசியகீதம் இதன் செயற்பாட்டுத் தன்மையினைச் செப்பிநின்றது.

இவைபோன்ற நடவடிக்கைகள் அரசின் இலக்கு நோக்கிய நகர்வுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன. அதேவேளை, எதிர்ப்படும் சவால்களோ ஏராளம் உள்ளன. நிறைவேற்று அதிகாரமுள்ள ஐனாதிபதியாய் இரண்டு முறைதான் இருக்கலாம் என்ற ஐனநாயக முறையைக் குழிதோண்டிப் புதைத்தவர்  அந்த இரண்டு முறைகளிலும் குறுக்கு வழியிலே குதிரை ஓடி வென்றவர். 

செங்கம்பளத்திலிருந்து இறங்கி, தார்வீதிக்கு வந்து ஐனநாயகம் தழைக்கப் பாடுபடுகின்றார் என்றால் வேடிக்கையான சவாலாக இருக்கின்றது. அது ஒட்ட நறுக்கப்பட வேண்டிய வால். ஓன்றைமட்டும் நான் சொல்வேன் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு நாங்கள் எல்லோரும் ஒரு அன்பான தாயால் பெற்றெடுக்கப்பட்ட அழகிய பிள்ளைகள் என்று பாடிவிட்டு இதுவரை எதை எதையெல்லாம் செய்திருக்கின்றோம். இனப்பற்று, மொழிப்பற்று, இடப்பற்று, மதப்பற்று என்றெல்லாம் நாம் நாம் வகுத்த வரையறைக்குள் நின்று நாட்டுப்பற்றை இழந்தோம். நம்மை நாமே கொண்றோம் நமது சொத்தை நாமே அழித்தோம் நமது சகோதரன்மேல் நாமே வஞ்சம் தீர்த்தோம் தேசிய கீதத்தின் வரிகளைத் தெருவிலே போட்டு மிதித்தோம்.

இருட்டுக்குள் இவையெல்லாம் நடைபெற்று விட்டன இனி வெளிச்சத்துக்கு வருவோம். நெஞ்சுக்கு அறியாது வஞ்சகம் இல்லை என்பார்கள் நாம் நாம் செய்த செயல்களை எல்லாம் மனம் திறந்து கொட்டுவோம். இவற்றையெல்லாம் நாம் பெருமைப்படலாமா என்று நம்மை நாமே கேட்போம். மனம் திற்ந்து பேசும்போது அல்லது சிந்திக்கும் போது பலவற்றை நாம் மறக்கலாம் மன்னிக்கலாம் நிவாரணம் வழங்கலாம் கட்டித்தழுவலாம், ஏன் கதறியும் அழலாம்.

வெள்ளை நிறப் பூனையின் பவ்வேறு குட்டிகள் நாம் எல்லோரும் பூனையின் குட்டிகளே. எமது நிறத்தை மாற்றாமல், தனித்துவத்தை மாற்றாமல் வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டு இயற்கையோடு ஒட்டிய விசமற்ற விவசாயத்தை விழைவிக்க முயற்சிப்பது போல் பன்மைத்துவம் பேணுகின்ற, இயற்கையோடு ஒத்து வராதபேதங்களைத் துக்கி வீசிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் உழைப்போம்.

இரண்டு கோடி ஐந்து இலட்சம் பேரும் வாழ்வோம் வீழ்ந்தால் இரண்டு கோடி ஐந்து இலட்சம் பேரும் வீழ்வோம் என்ற இலக்கோடு செயற்படுவோம் இவ்விதம் செயற்படுவோமாயின் எவ்வாறு இன்றைய நல்லாட்சியை அமைப்பதிலும், 1994ல் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியை அமைப்பதிலும் எங்கள் கரங்கள் ஒத்துழைத்தனவோ அதேவிதமான செயற்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: